செவ்வாய், 3 டிசம்பர், 2019

வர்மக்கலை வரலாறு


வர்மக்கலை உருவான விதம்:

அன்னைத் தமிழ் வளர்த்த சித்தர்களில் ஆதிசித்தனான சிவனே வர்மக்கலையை உருவாக்கினார் என வர்ம நூல்கள் பகர்கின்றன. அது எவ்வாறெனில் ஒருசமயம் சிவனும் பார்வதியும் கானகத்தின் வழியாக மாறுவேடத்தில் சுற்றிவரும்போது, அவ்வனத்தில் இருந்த ஒரு மரத்தின்அடியில் மரத்திலிருந்து தவறி விழுந்து மயக்கம் கொண்ட வேடனை  கண்டனர். அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனார் தன்கையிலிருந்த பிரம்பால் வேடனின் உடலிலுள்ள குறிப்பிட்ட வர்மத்தில் தட்ட வேடனும் உறங்கி எழுபவன்போல சாதாரணமாக எழுந்து அம்மையப்பனை வணங்கி விடைபெறுகிறான். இச்செயலுக்கான விளக்கத்தை உமையம்மை வினவ அதற்கு உடலிலுள்ள வர்மம், அடங்கல் என்ற இரண்டு ஸ்தானங்களை பற்றிய இரகசியங்களை ஈசன் அன்னைக்கு உபதேசிக்கிறார்.

முருகன் அன்னையிடம் வர்மம் கற்ற வரலாறு:

முன்னொரு காலத்தில் சூரபத்மன் என்ற அசுரன் மக்களையும், மற்றையோரையும் துன்புறுத்த அனைவரும் சிவனாரிடம் சென்று வேண்ட அவர் தன் மகன் வேலனை அழைத்து சூரனைக் கொல்ல பணித்தார். சிறுவனான வேலனோ பெரும் பலங்கொண்ட சூரனை வதைக்கும் மார்க்கம் என்னவென்று அறியாது அன்னையிடம் சென்று புலம்புகிறார். அப்பொழுது அன்னை ஈசன் முன்பு தனக்கு உபதேசித்த படுவர்மம், தொடுவர்மம், தட்டுமுறை, தடைமுறைகளை முருகனுக்கு உபதேசிக்கிறார். அன்னையிடம் வர்ம உபதேசமும், வேலாயுதமும் பெற்று சூரனை வதைத்த வரலாற்றை "வர்ம காவியம்" என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது.


"வந்ததோர் மகனை நோக்கி வலுவுறும் அசுரன் உயிரைத்தான்
கொன்றிட வேணுமென்றால் சொல்லுவேனொன்று கேள்நீ
நந்தியோடுசிவனும் சொன்னகாவியத்தில் படுவர்மம் பனிரெண்டும்
தொந்தமுடன் தொடுவர்மம் தொண்ணூற்றாறினொடு
தட்டுமுறை யுடன்தன் தடைமுறையுந் தானறிய
சூட்சமுடன் இடமுரைத்தார் கேள்
உந்தனுக்கு இந்தமுறை நன்றாய் தோன்றும்
உலகுதனி லொருவருக்கும் விளம்பிடாதே
அந்தரமாய் வாய்வுவரியின் எல்லைதனில்
அருளுடனே வேலதனை அழுத்திவிட்டால்
வந்தவந்த அசுரரெல்லாம் அழிந்து போவார்"
                                                                                                                                                               (வர்ம காவியம்)

அகத்தியர் முருகனிடம் வர்மம் கற்ற வரலாறு:



"நெஞ்சடை அரனார்பெற்ற செல்வனாங்குழந்தை வேலன்
நெஞ்சினில் மகிழ்ச்சிகொண்டு நினைவுடனகத் தீசருக்கு
மிஞ்சவே உபதேசித்த வெற்றியாந் தட்டுவர்மம்"
                                                                                                                                            (தட்டுவர்ம நிதானம்)

இதன் மூலம் முருகன் வர்மத்தின் இரகசியத்தை மனமகிழ்வுடன் அகத்தியருக்கு உபதேசித்தார் என்பதை அறியலாம்.


"நிலைக்கலாம் ஆதியிலே மைந்தா கேளு
நிலையான வேளிமலைக்கு ஏகும் போது
மலைத்துருவ மத்தியிலே குகைதானுண்டு
மார்க்கமுடன் அதிலொரு பெரியோர்தானும்
கலைக்கு அதிகமான சில நூல்கள் பேசி
கருணையுடன் இருக்கையிலே சென்றேன் யானும்
சிலைக்கதிகம் அகத்தீசா வாவென்றே தான்
தீர்க்கமுடன் உபசரித்து யிருஎன்றாரே.
இருவென்று அமுர்தரசம் கொள்ளும் போது
இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி
கருவென்ற பட்சியுட வீச்சும் காட்டி
கால்பலமும் புசபலமும் நரம்பும் சொல்லி
திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி
சிவகயில பொதிகையிலே போயிரு என்றார்கள்"
                                                                                                                 (தெட்சிணாமூர்த்தி காவியம் - 1000)

இதன் மூலம் வேளிமலையில் முருகனிடம் இருந்து அகத்தியர் சிலம்பம், பஞ்சபட்சி, அடிமுறைகள், வர்மம், மந்திரம் முதலியவற்றை கற்றதையும், பின் அவர் அங்கிருந்து பொதிகை மலை சென்றதையும் அறியலாம்.

வர்மம் என்றால் என்ன?

மனித உடலில் சில குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அல்லது எல்லா நேரத்திலும், குறிப்பிட்ட வேகத்தில் காயம் ஏற்படுமாயின் செயலிழத்தல், நோய் தோன்றல், மயக்கம் மற்றும் மரணம் ஆகியன ஏற்படுகின்றன. இந்த நிகழ்வே ‘வர்மம்’ என்று அழைக்கப்படுகிறது.

மனித உடலின் இந்த குறிப்பிட்ட இடங்களைப் பயன்படுத்தி, நோய்களை குணமாக்கவும் முடியும், மயக்கத்தைப் போக்கவும் முடியும், உடல் வலிமையை பெருக்கவும் முடியும். இவ்விதம் குணமாக்கும் முறையே வர்ம மருத்துவமாகும்.


"உள்ளபடி நூற்றெட்டு தலம் சாவாகும்
உணர்வாகி அத்தலங்கள் உயிருமாகும்
கள்ளமுற்ற அத்தலங்கள் பிணியுமாகும்
களங்கமாற்றல் அத்தலங்கள் சுகமேகாணும்
உள்ளுணர்வாய் அத்தலங்கள் வாசியேற்ற
உற்றதினால் அத்தலங்கள் உறுதி சேரும்
புள்ளடிபோல் அத்தலங்கள் கண்டவர்கள்
புகலார்கள் எல்லோரும் புவியில் உள்ளோர்க்கே"
                                                                                                  (வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம் - 1200)

மனித உடலில் முக்கியமான வர்மங்கள் 108 இடங்களில் காணப்படுகின்றன. இவைகளே ஒரு மனிதன் இறப்பதற்கும் (Death), உயிரோடு இருப்பதற்கும் (Live), நோய் நிலையை அடைவதற்கும் (Disease), சுகமடைவதற்கும்  (Treatment), ஆரோக்கியத்துக்கும் (Health) காரணமாக அமைகின்றன.

வர்மத்தின் வேறு பெயர்கள்:

காலன், ஏமம், வன்மம், அடிக்கும், சூட்சம், காலம், மர்மம், ஒடிவு, முறிவு என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படும்.
  • வர்ம அடிபட்டவனை குறித்த காலத்தில் எழுப்ப தவறினால் மரணம் சம்பவிப்பதால் "காலன்” எனவும்,
  • பகைவரிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும் தற்காத்துக் கொள்வதால் "ஏமம்" எனவும்,
  • வலிந்து தாக்குவதால் "வன்மம்" எனவும்,
  • உடலின் சூட்சமமான பகுதிகளில் தாக்குவதால் "சூட்சம்" எனவும்,
  • மர்ம தானங்களில் அடங்கியிருக்கும் கலை ஆதலால் "அடக்கம்" எனவும்,
  • எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் ஒடிவு, முறிவுகளை பற்றி கூறுவதால் "ஒடிவு" எனவும், "முறிவு" எனவும்,
  • யாருக்கும் தெரியாமல் இரகசியமாக பாதுகாப்பாக மறைக்கப்பட்ட கலை ஆதலால் "மர்மம்" எனவும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இலக்கியத்தில் வர்மம்:

‘வர்மம்’ ஆயுர்வேதத்தில் ‘மர்மம்’ என்றழைக்கப்படுகிறது. மர்மம் என்றால் இரகசியம் (Secret) என்ற ஒரு பொருளைத்தான் தரும். ஆனால் ‘வர்மம்’ பலபொருளை உள்ளடக்கிய ஒரு கலைச் சொல் ஆகும். வர்மம், ‘வன்மம்’ (நூல் : வர்ம விதி) என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். கம்பராமாயணம் யுத்த காண்டத்தின் அதிகாயன் வதைப்படலத்தில் நீலன் என்ற வானரப்படை வீரன் உன்மத்தன் எனும் அரக்கர்படை வீரனை கொல்வது விவரிக்கப்படுகிறது.


      ‘உன்மத்தன் வயிரமார்பின் உரும் ஒத்த கரம் சென்றுற்ற
வன்மத்தை கண்டும் வீழ்ந்த மதமதத்த மலையைப் பார்த்தும்'
                                                                                                                                (கம்பஇராமாயணம்)

அதாவது உன்மத்தனின் வச்சிரம் போன்ற மார்பில் நீலனது கையானது இடி போன்ற வன்ம அடியைச் செலுத்தியதன் விளைவாக உன்மத்தனின் மலை போன்ற உடல் உயிரற்று வீழ்ந்தது. ‘வன்மை’ என்ற வார்த்தையே ‘வன்மம்’ (Malice) என்றாகி பின் வர்மமாக மாறியிருக்க வேண்டும். (Malice =  வர்மம் / எசேக்கியல் 25:6,15 / பைபிள்)

வர்மமும்  சித்த மருத்துவமும்:


சித்தர்கள் கண்டறிந்த மருத்துவம் என்பதால் வர்மத்தை சித்த மருத்துவமாகக் கொள்ளலாம். முதல் சித்தனாம் சிவன் தன் மகன் முருகனுக்கும், முருகன் அகத்தியருக்கும், அகத்தியர் தன் சீடர்களாகிய பல சித்தர்களுக்கும் வர்மத்தைப் பற்றி உரைத்தார். சித்தர்களுள் முதன்மையும் முக்கியத்துவமும் பெற்றவர் அகத்தியர் ஆவார். இவர் கும்பமுனி எனவும் அழைக்கப்பட்டார். இவரும், இவருடைய சீடர் தேரையரும் கூட வர்ம நூற்களை இயற்றியுள்ளனர். இவர் பொதிகை மலையிலிருந்து தமிழையும், சித்த மருத்துவத்தையும், வர்ம மருத்துவத்தையும் வளர்த்தார்.

போகர் என்ற சித்தர் பழனி மலையில் முருகனுக்கு நவபாஷாண கட்டாலான சிலை ஒன்றை வடித்தார் எனும் செய்தி ஒன்றுண்டு. அவரும் முருகனிடம் வர்மம் பற்றிய உபதேசத்தைப் பெற்றிருக்க முடியும். ஏனென்றால் வர்ம நூற்கள் சில போகரைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. போகரின் சீடர் புலிப்பாணி என்ற சித்தரும், போகரின் குரு காலாங்கி என்ற சித்தரும் வர்ம நூற்களை இயற்றியுள்ளனர். இவ்வாறு வர்மம் சித்தர்களால் வளர்க்கப்பட்டது.

வர்மமும் ஆயுர்வேத மருத்துவமும் :

ஆயுர்வேத மருத்துவ நூற்களிலும் வர்மத்தைப் பற்றிய சில அடிப்படை குறிப்புகள் உள்ளன. ஆயுர்வேதம் வர்மத்தை மர்மம் என்று குறிப்பிடுகிறது. உடலில் மொத்தம் 107 மர்ம பகுதிகள் உண்டென்று ஆயுர்வேத நூலில் ஒன்றான ‘அஷ்டாங்க இருதயம்’ குறிப்பிடுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வர்மங்கள், மனித உடலில் ஏற்படும் காயங்களின் (Trauma) முக்கியத்துவத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. அந்த வர்ம இடங்களையே பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு காணும் மருத்துவ முறைகள் (Treatment) பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனால் வர்ம மருத்துவம், வர்மங்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் குறிப்பிடுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ‘வர்ம மருத்துவ நூல்கள்’ இந்த மருத்துவத் துறையில் இடம் பெற்றுள்ளன.

வர்மம் நூல்கள்:

  1. அகத்தியர் வர்ம சூத்திரம்
  2. அகத்தியர் வர்ம பீரங்கி
  3. அகத்தியர் வர்ம ஒடிமுறிவு சாரி
  4. அகத்தியர் வர்ம நிகண்டு
  5. அகத்தியர் வர்ம கண்ணாடி
  6. வர்ம வரிசை
  7. அகத்தியர் மெய்தீண்டாக்கலை
  8. வர்ம பொன்னூசி
  9. வர்ம ஊசிமுகம்
  10. வர்ம ஆணிநூல்
  11. வர்ம பஞ்ச சூத்திரம்
  12. வர்ம சர சூத்திரம்
  13. வர்ம குரு நாடி
  14. வர்ம சாரி
  15. வர்ம வில்லும் விசையும்
  16. வர்ம சிலோற்பம்
  17. வர்ம லாட சூத்திரம்
  18. வர்ம நரம்பு சூத்திரம்
  19. வர்ம ஒடிமுறிவு நிகண்டு
  20. வர்ம குடோரி
  21. படுவர்ம நிதானம்
  22. வர்ம சர நூல்
  23. வர்ம ஒடிமுறிவு ஞானம்
  24. வர்ம மாத்திரை
  25. வர்ம குறவஞ்சி
  26. வர்ம காவியம்
  27. வர்ம சூட்சம்
  28. தட்டு வர்ம திரட்டு
  29. வர்ம திறவுகோல் திரட்டு
  30. வர்ம சிந்தாமணி
  31. வர்ம விமானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக