செவ்வாய், 3 டிசம்பர், 2019

வர்ம முத்திரைகள்



நாட்டியத்தில் கைவிரல்களை நீட்டியும், மடக்கியும், சுழற்றியும் பலவிதமாக அபிநயம் செய்யும் முறையே முத்திரைகள் எனப்படும். இது நாட்டியத்திற்கு மேலும் அழகையும், கவர்ச்சியையும் தருகிறது. அதேபோல வர்மக்கலையிலும் சிலவகையான முத்திரைகள் உள்ளன. இவை கைகளில் ஆயுதம் இல்லாத தருணங்களில், தாக்கவரும் சமயங்களில் தற்காப்பிற்கும், தாக்கவும் பயன்படுகிறது. மேலும் இம்முத்திரைகள் வர்ம அடிபட்டவரை காப்பாற்றும் வர்ம இளக்கு முறையிலும் பயன்படுகிறது.


பொதுவாக வர்மக்கலையில் பனிரெண்டு முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இவை மட்டுமல்லாது வேறுபல முத்திரைகளும் உள்ளன. அந்த முத்திரைகள் பெரும்பாலும் மேற்கூறப்பட்ட பனிரெண்டு முத்திரைகளின் விரிவுகளாகவே (Variation) உள்ளன. இனி வர்மக்கலையில் பன்னெடும் காலங்களாகப் பயிலப்பட்டு வரும் முத்திரைகளை பற்றிப் பார்க்கலாம்.

1) யானை முக முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி, நடு விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று மேலே உயர்த்தி யானையின் துதிக்கையை போலக் காட்ட வேண்டும். இது "யானை முக துத்திரை" எனப்படும்.

2) குதிரை முக முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி ஆள்காட்டி விரலை மாத்திரம் மடக்கிய நிலையிலேயே சற்று உயர்த்தி கட்டை விரலை நன்றாக அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே "குதிரை முக முத்திரை".

3) சர்ப்ப முத்திரை:

கை விரல்களில் ஆள்காட்டி விரலை மாத்திரம் சற்று தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இது "சர்ப்ப முத்திரை" ஆகும்.

4) சக்தி முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் நீட்டி ஒன்றோடு ஒன்று இணைத்து இறுக்க பிடிக்க வேண்டும். இதுவே "சக்தி முத்திரை" எனப்படும்.

5) விஷ்ணு முத்திரை:

கை விரல்களின் நடுவிரலையும் , ஆள்காட்டி விரலையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து நேராக நிறுத்த வேண்டும். கட்டை விரலால் மற்ற இரண்டு விரல்களையும் அழுத்திப் பிடிக்க வேண்டும். இதுவே "விஷ்ணு முத்திரை" ஆகும்.

6) சக்கர முத்திரை:

ஆள்காட்டி விரலை மாத்திரம் விறைப்பாக வலுவாகத் தூக்கி நிறுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இது "சக்கர முத்திரை" எனப்படும்.

7) சங்கு முத்திரை:

கை விரல்கள் நான்கையும் பாதியாக மடக்கி கட்டை விரலை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதைப் பார்ப்பதற்கு சங்கின் அடிப்புறம் போல் இருக்கும். இது "சங்கு முத்திரை" எனப்படும்.

8) வேல் முத்திரை:

ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல் ஆகியவற்றை  நீட்ட  வேண்டும். நீட்டிய விரல்கள் வலுவாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களையும் மடக்கிப் பிடிக்க வேண்டும். இதுவே "வேல் முத்திரை" எனப்படும்.

9) திரிசூல முத்திரை:

ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் வலுவாக நீட்டிக் கொள்ள வேண்டும். மற்ற விரல்களை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே "திரிசூல முத்திரை".

10) பஞ்ச முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் பிரித்துப் பாதியாக மடக்கி விரல்களை வலுவுள்ளதாக வைக்க வேண்டும். இதுவே "பஞ்ச முத்திரை" எனப்படும்.

11) புறங்கை முத்திரை:

கை விரல்கள் அனைத்தையும் மடக்கி வலுவாகப் பிடிக்கும்போது பையின் மேல் முட்டிப் பகுதியை வலுவாக நிறுத்த வேண்டும். இதுவே "புறங்கை முத்திரை".

12) புறங்கால் முத்திரை:

காலை விறைப்பாக நீட்டிக் காலின் குதிகாலை வலுவாகத் தூக்கி நிறுத்த வேண்டும். இதுவே "குதிகால் முத்திரை" எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக