செவ்வாய், 3 டிசம்பர், 2019

வர்ம தற்காப்பு கலைகள்

அடிமுறைகள் மற்றும் சிலம்பம்:




தமிழர்களின் பரம்பரையான வீரவிளையாட்டு முறைகளான சிலம்பம், அடிமுறைகள், பிடிமுறைகள், ஆயுத விளையாட்டுக்கள், மல்யுத்தம் போன்ற பலவகையான விளையாட்டுகளில் தெரிந்தும் தெரியாமலும் வர்மம் கலந்து இருப்பதை நாம் காணலாம். வர்மம் அறிந்த ஒருவர் விளையாடும் விளையாட்டுக்கும், மற்றவர்களின் விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. வர்மம் நன்கு கற்ற ஒருவர் இச்சண்டைமுறைகளை விளையாட்டாக விளையாடும் போது எதிரிக்கு வர்மத்தில் அடிபடாதவாறு கவனமாக விளையாடுவதையும், உண்மையான சண்டையில் வர்மத்தில் அடிக்க தீவிர நுட்பத்துடன் விளையாடுவதையும் அறியலாம். வர்ம சண்டை முறைகளில் பல வகைகள் உள்ளன.


களரி:

களர் நிலம் என்னும் பயன்படாத நிலத்தில் பயிற்றுவிக்கப்படும் போர் பயிற்சியே ‘களரி’ ஆயிற்று எனக்கொள்ளலாம். களம் என்னும் சொல்லின் அடிப்படையிலும் ‘களரி’ என்னும் சொல் உருப் பெற்றதாகவும் கொள்ள இடமுண்டு. இதை ‘களரிப் பயிற்று என்றும் அழைப்பர். (களரி - போர் பயிற்சி செய்யும் களம். பயிற்று - பயிற்றுவித்தல்) களரி பயிற்றுவித்தல் என்ற தமிழ் சொல்லே மருவி களரி பயிற்று ஆயிற்று.


“தூதணம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
வரிமணல் அகன்திட்டை’’

என உருத்திரங்கண்ணனார் தனது பட்டினப்பாலையில் கூறுவதன் மூலம் ‘களரி’ என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

‘முது மரத்த முரண் களரி’ என பட்டினப்பாலைத் தமிழ் வர்ணித்தாலும், இன்றைக்கு இக்களரிக்கலை கேரளாவுக்குச் சொந்தமானதைப் போல ஆயிற்று. கேரளாவிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில இடங்களிலும் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. கேரளாவின் களரி ‘வடக்கன் களரி’ என்றும் தமிழகத்தின் களரி ‘தெக்கன் களரி’ என்றும் அழைக்கப்படுகிறது. தெக்கன் களரி என்ற கலை தமிழகத்தின் பிற பகுதிகளில் ‘சிலம்பம்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது.

  • வடக்கன் களரி : கேரளத்தின் வடபகுதியில் பயிற்றுவிக்கப்படும் களரி முறைகள்.
  • தெக்கன் களரி : தமிழகம் மற்றும் கேரளத்தின் தென்பகுதியில் பயிற்றுவிக்கப்படும் களரி முறைகள்.
  • பெருங்களரி : அறுபது அடிநீளமும், முப்பத்தாறு அடி அகலமும் கொண்ட பெரிய களத்தில் பயிற்றுவிக்கப்படும் களரி.
  • சிறுகளரி : இருபத்தைந்து அடி நீளமும், பதினாறு அடி அகலமும் கொண்ட சிறிய களத்தில் பயிற்றுவிக்கப்படும் களரி.
  • நிலக்களரி : சமவெளியில் பயிற்றுவிக்கப்படும் களரி.
  • குழிக்களரி : களத்தினை குழியாகத் தோண்டி, அதற்குள் பயிற்றுவிக்கப்படும் களரி.

களரியின் பிரிவுகள் :

பொதுவாக களரியை இருபெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அவை :
 (i) வடக்கன் களரி
 (ii) தெக்கன் களரி

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக