செவ்வாய், 3 டிசம்பர், 2019

தமிழர்களும் வர்மக்கலையும்

தமிழர்களும் வர்மக்கலையும்



நமது தமிழ் மண்ணிலிருந்து தோன்றிய கலைகளில் அன்று முதல் இன்று வரை அரும்பெரும் கலையாகப் போற்றப்படுவது "வர்மக்கலை ". இந்தத் தமிழ் வர்மக்கலையைக் குடமுனி என்ற அகத்திய முனிவர் சிவபெருமானின் அருள் கடாட்சம் பெற்று அதைச் சித்த புருசர்களுக்கும் தமிழர்களுக்கும் அருளிய அற்புதக் கலை.

வர்மக்கலை என்ற வார்த்தைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் "அடவு வர்மம்" என்று சொல்லக்கூடிய தற்காப்புக்கலை மனித உடலில் ஏற்படும் சுகவீனங்களை முற்றிலும் களையும் விதமாக நரம்பு மண்டலங்களைத் (vital points) தூண்டி விட்டுக் குணப்படுத்தும் வர்ம மருத்துவம்.

மேலும்  சமூக விரோதிகளையும் காட்டு விலங்குகளையும் நமது விழிகளின் சக்தியால் முற்றிலுமாக முடக்குவது "நோக்கு வர்மம்". எதிரிகளை அவர்களது உடலைத் தொடாமல் தொலைவிலிருந்து வீழ்த்துவது "மெய்தீண்டா வர்மக்காலம்". இப்படிப் பல பிரிவுகளில் வர்மம் என்று சொல்லக்கூடிய வர்மக்கலை மனித உடலில் கடமையாற்றி வருகிறது.

சித்தர்கள் மற்றும் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகள் அனைத்தும் பொறாமைப்படும் வகையில் கொடிகட்டிப்பறந்த வர்மக்கலை தமிழ் மன்னர்களின் மண்  ஆளுகைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அந்நியர்களின் படையெடுப்பால் பலம் குன்றியதன் விளைவு தமிழகத்தில் உள்ள கோவில்களின் தங்க அணிகலன்களும் படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கப்பட்டு அரிய ஓலைச்சுவடிகளும் தீயிடப்பட்டுப் பொசுக்கப்பட்டன.

இப்படி ஓலைச்சுவடிகள் பொசுங்கிய நிலையில் வர்மக்கலையைக் குருகுல முறையில் கற்றுக் கொண்ட வர்ம குருமார்கள் ஓலைச்சுவடிகளின் வாசகங்களைத் தங்களது நெஞ்சப்பலகைகளில் தீட்டிக்கொண்டதன்  காரணமாக..... மன்னர் ஆட்சி  முடிந்து மக்களாட்சி மலர்ந்தபின்பு.... வர்மக் கலையின் ரகசியங்களும் அதன் பாட முறைகளும் மீண்டும் பனை ஓலைச் சுவடிகளில் ஏற்றி அதைத் தத்தமது குடும்பச் சொத்தாகப் பாவித்துத் தமது குடும்ப வழியினருக்கு மட்டுமே பயிற்சியளித்து வந்ததன் விளைவாக் தமிழ் வர்மக்கலை என்ற அற்புதக்கலை அழிவை நோக்கிப் பயணம் செய்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அகத்தியர் அருளிய "வர்ம சூத்திரம் ", "வர்மப் பொன்னூசி" முதலிய எண்ணற்ற ஓலைச்சுவடிகள் அழிந்து விட்ட நிலையில் தற்போதைய வர்மகுருமார்கள் பொக்கிஷமாகப் பாதுக்காக்கும் ஓலைச்சுவடிகள் யாவும் முன்னூறு அல்லது நானூறு வயது கொண்டவையாகத்தான் இருக்கும். அதுதான் உண்மையும் கூட.

நாம் மீண்டும் மன்னராட்சிக்கு வருவோம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாகப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட தமிழ் வர்மக்கலை தமிழக மக்களை வளமான நலமுடன் வாழ வைத்தது  கண்கூடான உண்மை.

ஒன்பதாம் நுற்றாண்டுப் பாண்டியர்கள் வர்மக்கலையின் வளர்ச்சிக்காகத் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள பிரபலமான குரும்பூர் என்ற சிறு நகரத்திற்கு  அருகில் "அங்கைமங்கலம்" என்ற ஒரு சிற்றூரை ஏற்ப்படுத்தி அதில் மேற்குப் பார்த்த நிலையில் "நரசிங்கநாத ஈஸ்வரர்" என்ற சிவன் கோவிலைக் கட்டி அதன் முன்புறமுள்ள பெரும் திடலில் பாண்டிய நாட்டின் முக்கியப் பிரமுகர்களுக்கும் ஒற்றர்களுக்கும் படைவீரர்களுக்கும் தமிழ் வர்மக்கலையைப்  பயிற்ச்சியளித்து வந்துள்ளனர்.இதற்கான ஆதாரம் இந்தக் கோவிலின் சுவர்களில் கல்வெட்டுகளாகத் தீட்டப்பட்டுள்ளன.

மேலும் அயோத்தியை ஆண்ட இராமர் காலம் முதல் கடைநிலை மன்னர்கள் காலம்வரை வர்மக்கலையை "அங்கைப் போர் முறை" என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். "அங்கை" என்றால் வெறும் உள்ளங்கை என்று பொருள். விரல்கள் முஷ்டி பிடித்த கையாக மாறும்போது "அங்கை" அதாவது "வெறும் கை" என்ற பொருள்படும்.

மேலும் கம்பர் எழுதிய இராமாயணத்தில் யுத்தகாண்டப் பகுதியில் நீலன் என்ற வானரம்(குரங்கு) அங்-கை போர் முறையில் இராவணனின் படை வீரர்களுடன் மோதுவதை வெகு அற்புதமாக விளக்கியுள்ளார்.

இராமாயணத்தில் வர்மக்கலை இப்படி இருக்கையில் சற்றுப் பின்னோக்கிச் சென்றோமானால் கி.பி 520-ஆம்  ஆண்டு பல்லவ நாட்டின் இளவரசன் தர்ம பல்லவன் புத்தமதத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதில் சந்நியாசம்  பெற்று மதத்தைப் பரப்புவதற்காகச் சீனா வரை சென்றான்.

அங்குச் சீன மன்னன் லியாங் நட்டியின் அனுமதி பெற்று சாங் ஷான் மவுண்ட் என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து அந்த ஆசிரமத்தில் சீனர்களுக்கு வர்மக்கலையின் நுணுக்கங்களையும் புத்த மதத்தின் கோட்பாடுகளையும் பயிற்ச்சியளித்து வந்த நிலையில்.... சீனாவில் "ஷாவோலின் குங்பூ" என்று பெயரிடப்பட்ட நமது அகத்தியரின் இந்தத் தமிழ் வர்மக்கலை அங்கிருந்து ஜப்பானின் ஓக்கினாவா தீவில் காலூன்றி "கரா-தே" என்ற பெயரில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

ஜப்பானிய மொழியில் "கரா-தே" என்றால் வெறும் கை என்று அர்த்தம். ஆக வெளிநாடுகளில் நமது வர்மக்கலை பல்லவ இளவல் தர்ம பல்லவனால் (போதி தர்மா) குங்பூ கராத்தே, ஜுடோ, டேக் வாண்டோ, குத்துச்சண்டை என்று மிகவும் வீரியம் பெற்றது.

நமது நாட்டிற்கு அது சற்று நவீன வடிவமாகத் திரும்பி வந்து தமிழர்களின் வீரத்தை அசைத்துப் பார்க்கின்ற வேளையில் வர்மக்கலையின் கால்வாசி  வீரியத்தை "இந்தியன்" மற்றும் "ஏழாம் அறிவு" ஆகிய திரைப்படங்கள் முலமாக ஓரளவு தெரிந்து ஆர்வம் கொண்டவர்கள் பிறகு அதை வழக்கம்போல் மறந்தும் போய்விட்டார்கள்.

இன்று உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் யாவரும் பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர பொதுவாகவே தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

இந்நிலையில் நமது பண்டைய கலையை மீட்டெடுக்கும் விதமாகவும் விளையாட்டு விபத்துக்களைச் சீர்செய்வதற்காகவும் நமது தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரிய ஆசிரியைகளுக்கு தமிழ் வர்மக்கலையை முழுமையாக முறையாகப் பயிற்சி கொடுப்பதன் மூலமாகத் தமிழர்களின் தமிழ் வர்மக்கலை மீண்டும் ராஜபவனி வரும் என்று உறுதியாகக் கூற முடியும்.                   மேலும் வர்மக்கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகித்த அங்கை மங்கலம் கிராமத்தை வர்மக்கலை கிராமமாக அரசு அறிவிப்பது வர்மக்கலைக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக