செவ்வாய், 3 டிசம்பர், 2019

சிலம்பத்தில் சுவடு முறைகள்



மறத்தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும், கலாச்சார கருவூலமாகவும். புறநானூற்று வீர மரபின் பெரும் பகுதியாகவும், .. களரி, வர்மம், குத்துவரிசை, சைலாத் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிலம்பக்கலையின் வரலாற்றையும், அதன் பிரிவுகளையும் பற்றி முந்தைய பதிவுகளில் போதுமானவரை தெரிந்து கொண்டோம். இனி இந்தப் பதிவில் நமது தமிழர் கலையாம் சிலம்பத்தில் பயின்று வரும் சுவடு முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

சிலம்பத்தில் சுவடு என்பது கால்களை மாற்றி மாற்றி வெவ்வேறு நிலைகளில் வைத்து ஆடும் முறையாகும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி வைத்து விளையாடுவதால் எதிரி எந்தத் திசையிலிருந்து எப்படி தாக்கினாலும் அந்த அடியைத் தடுக்கவோ அல்லது திருப்பி அடிக்கவோ முடியும். ஆசான் சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு முதலில் கைகளில் ஆயுதம் ஏதுமின்றி இந்தச் சுவடு முறைகளை மட்டும் பயிற்றுவிப்பார். மாணவர்கள் இம்முறையில் தேர்ந்த பிறகு கைகளில் கம்பு கொண்டு இந்தச் சுவடு முறைகளைப் பயில்வர். பொதுவாகச் சிலம்பத்தில் 18 வகையான சுவடு முறைகள் உள்ளன. அவை,

01) சுவடு:

இது சிலம்பத்தில் உள்ள எல்லா வகையான ஆட்ட முறைகளையும் குறிக்கும் பொதுச்சொல்.

02) தெக்கன் சுவடு:

இது தமிழகத்தில் பயின்று வரும் தெற்கன் களரி எனும் முறையாகும்.

இதன் பிரிவுகள்:
  • மெய்பாடம்
  • ஒற்றைச் சுவடு
  • இரட்டைச் சுவடு
  • சீன அடி
  • முதுகு ஒட்டிச் சுவடு
  • குறுந்தடிச் சிலம்பம்
  • நெடுந்தடி
  • பூட்டும் பிரிவும்
  • கைப்போர்
  • சைலாத்
  • அடி பிடி மல்
  • மண்ணடிமல்
  • நடசாரி
  • ஆயுதப் பிரயோகம்
  • பரடு போன்றவை.,


03) வடக்கன் சுவடு:

இது கேரளாவில் ஆடப்பட்டுவரும் வடக்கன் களரி எனும் முறையாகும்.

இதன் பிரிவுகள்:
  • வந்தனம்
  • மெய்பயற்று
  • ஆயுதப்பயற்று
  • முச்சாண்
  • கதாயுதம்
  • ஒட்டாப்பயற்று
  • கட்டாரி
  • குந்தம்
  • வாள்-கேடயம்
  • நெடுவடி
  • உறுமி
  • வெறுங்கை முறை
  • ஆள் மாறாட்டம்
  • வியுகங்கள் போன்றவை...


04) பொன்னுச்சுவடு:

இது இடையில் பதுங்கி, பம்மல் செய்து, பாய்ந்து, பூனைப்போலும், பொன் போலும் அடியெடுத்து போர் புரியும் முறை.

05) தேங்காய்சுவடு:

தேங்காய் கண் போன்று அமைந்துள்ள  வட்டப் பகுதிகளுக்குள் கால் வைத்துப் பயிற்சி செய்யும் முறை.

06) ஒத்தைச் சுவடு:

மூன்று வட்டங்களுக்குள் ஒரு காலை ஊன்றி இருபுறமும் திரும்பும் முறை.

07) குதிரைச் சுவடு:

நான்கு பக்கமும் வரும் எதிரியைத் தாக்குவதற்கான கால் வைக்கும் முறை.

08) கருப்பட்டிச் சுவடு:

சதுர வடிவில் அமைந்துள்ள வட்டப் பகுதிகளுக்குள் வீடுகட்டும் முறை. எதிரிகளை நெருங்கவிடாமல் இம்முறையில் சுழற்றலாம்.

09) முக்கோணச் சுவடு:

முக்கோண வடிவில் அமைந்துள்ள வட்டங்களுக்குள் கால்வைத்து பயிற்சி செய்யும் முறை. இம்முறை திருப்பத்திற்கு பயன்படுகிறது.

10) வட்டச் சுவடு:

எதிரிகள் இருவர் சுழன்று போரிடும் முறை.

11) மிர்ச்சைச் சுவடு:

மேற்கண்ட அனைத்து கால்வைப்பு முறைகளும் கலந்து போரிடுதல்.

12) சர்ச்சைச் சுவடு:

எதிரியைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் முறை. இம்முறையில் நிற்பவர் எந்தப் பக்கம் தாக்குவாரென ஊகிக்க முடியாது.

13) கிளவி வரிசை:

பாட்டுப்பாடி எதிரியின் உடலில் உள்ள வர்மங்களைச் சுட்டி சிலம்படிக்கும் முறை (தற்போதைய குறுந்தடிச் சிலம்பம்).

14) கதம்ப வரிசை:

குருவிடம் வணக்கம் செய்வதற்காகப் பலவித வீச்சுக்களையும் கலந்து செய்யும் போர்முறை.

15) சக்கர கிண்டி:

எதிரிகள் பலர் சூழ்ந்து நிற்கும்போது, எதிரிகளின் வியுகத்தை உடைக்கும் போர்முறை (படைவீச்சில் இம்முறை பயன்படுகிறது).

16) சித்திர சிலம்பம்:

சிலம்பத்தில் வரும் தீப்பாண வீச்சு முதலிய அனைத்து அலங்கார சிலம்ப வகைகளும் இம்முறையில் அடங்கும்.

17) கருநாடக வரிசை:

தொன்மையான பழைய போர்முறை. வெறுங்கை அடிமுறைகள் ஆகும். தற்போது "நடசாரி" "கருநாடக சுவடு அடிமுறை" என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது.

18) கள்ளர் விளையாட்டு:

இது பொதுவாகத் தமிழகத்தில் விளையாடப்படும் நெடுங்கம்படி முறையாகும்.


ஆதாரம்: தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் (VOL-II)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக