1) கல்வம்:
கருங்கல்லினால் குழி பரவலாகச் செய்யப்பட்ட குழி அம்மியின் அளவானது 30 விரற்கடை அகலம், 40 விரற்கடை அகலம், விளிம்பு 2 விரற்கடையும், ஆழம் 2 விரற்கடை அளவும், இருபுறமும் மூக்கு நீண்டபடி இருக்க வேண்டும். அதே போலக் குளவியானது 16 விரற்கடை நீளமும், கைப்பிடி 4 விரற்கடை அளவும், அரைக்கும் பகுதி 10 விரற்கடை அளவும் இருக்க வேண்டும்.
2) மரக்கரண்டிகள்:
வேம்பு, மா, நுணா, வேங்கை போன்ற மரங்களால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அகப்பைகள்.
3) அகல்:
களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அகல்கள்.
மரம், உலோகம், கண்ணாடி போன்றவற்றால் செய்யப்பட்ட குப்பி, குடுவைகள் மற்றும் அவற்றுக்கான அடைப்பான்கள் போன்றவை மருந்துப் பொடிகள், தைலங்கள், லேகியங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கப் பயன்படும்.
புண், புரை, கட்டி போன்றவற்றை அறுத்து மருந்திட்டு குணப்படுத்த பயன்படுகிறது.
மண், இரும்பு, செம்பு போன்றவற்றால் செய்யப்பட்டவை. இவை மருந்துகளின் செய்முறைகளில் பெரிதும் பயன்படுகிறது.
குகை, களிமண், அரக்கு, முட்டை வெண்கரு, மூலிகைச்சாறு, சுக்கான்கல், தேங்காய் நாறு, இரும்புத் தூள், பாடணம், சணல், காந்தப் பொடி, இளநீர் போன்றவற்றால் செய்யப்படும் மூசைகள் உலோகம், பாடாணம் போன்றவற்றை உருக்கிச் சாய்க்க பயன்படுகிறது.
வெண்மை மற்றும் கருமை நிற துணிகளைத் தூய களப்பற்ற களிமண் கலந்த நீரில் நனைத்து புடமிடும் சட்டிகள், குப்பிகள், அகல் போன்றவற்றின் வாய் பகுதியில் மேல்மூடியிட்டு கவசம் செய்யப் பயன்படும். இதனால் அந்தப் பாத்திரங்களினுள்ளே காற்று புகுவது தடுக்கப்படுகிறது.
காடுகளில் தாவரங்களை மேயும் மாடுகளின் சாணத்தால் அளவாகத் தட்டி காயவைத்து எடுக்கப்பட்டவை. வறட்டிகளின் எடை இரண்டு பலம் (60 கிராம்), அகலம் 8 முதல் 12 அங்குலம், ஒரு விரல் கனமும் இருக்க வேண்டும்.
கருங்கலல்லால் செய்யப்பட்ட அம்மியின் அகலம் 1 அடி, நீளம் 2 அடி மற்றும் உயரம் 1 அடியும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற குளவியும் இருக்க வேண்டும்.
ஒரு பாண்டத்தில் நீர், பால் அல்லது மூலிகை சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விட்டுப் பாத்திரத்தின் வாயை மெல்லிய சீலையால் கட்டி அதன்மீது பிட்டவியல் செய்ய வேண்டிய பொருளைக் குவித்து மேல் சட்டி மூடி உள்ளே உள்ள ஆவி வெளியேறாதபடி சீலை செய்து சிறு தீயாக எரிக்க வேண்டும்.
ஒரு மண் பாத்திரத்தில் நீர், பால், மூலிகை சாறு முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை விட்டுப் பொருத்தமான மேல்மூடியின் மத்தியில் சிறுதுவாரம் உண்டாக்கி அதன் வழியாகக் கயிற்றைச் செலுத்தி சரக்கைத் தேவைக்கேற்ப திரவத்தில் மூழ்கி இருக்கும்படியோ அல்லதி ஆவிபடும்படியோ வைத்துக் கட்ட வேண்டும். கயிற்றின் மறுமுனை பாத்திரத்தின் உள்ளே விழாதபடி இருக்க சற்று பெரிய முடிச்சோ அல்லது சிறிய குச்சியோ வைத்துக் கட்ட வேண்டும்.
கிழி கட்டி எரிக்கும் முறையாவது சரக்கைச் சுத்தமான துணியில் வைத்துக் கட்டி மேற்கூறியபடி எரிப்பதாகும்.
ஒரு மண்பாத்திரத்தில் தூபத்திற்காகக் கூறப்பட்ட சரக்கையிட்டு, வாய்க்கு மெல்லிய சீலைகட்டி, அதன் மத்தியில் சூரணத்தை வைத்து மேல்சட்டி மூடிச் சீலைசெய்து சிறுதீயால் எரிக்க அடிப்பாண்டத்திலிட்ட சரக்கு புகைந்து மேலெழும்பி சூரணத்தோடு கலக்கும். இந்த இயந்திரத்தின் வடிவமைப்பு அவி இயந்திரத்தின் வடிவத்தை முழுதும் ஒத்திருக்கும்.
ஒரு நீண்ட கழுத்துள்ள பெரிய மண்கலத்தில் (கொள்ளளவு - 10 லிட்டர்) தைலச் சரக்குகளை வைத்து, அதன் வாய்க்குப் பொருத்தமான வாய் உள்ளதும் முன்னதன் அளவுக்கு நான்கில் ஒருபங்குள்ளதுமான (கொள்ளளவு - 2.5 லிட்டர்) மற்றொரு கலத்தைக் கவிழ்த்து, பொருந்துவாய்க்கு மண்பூசி, நூலினால் இரண்டு கலங்களின் வாயைச் சேர்த்து கட்டிய பின் அதன்மீது ஏழு சீலைமண் செய்ய வேண்டும்.
இவ்விரண்டு கலங்களின் நடுஇடங்களில் பெரிய கலத்தின் மேல்புறத்தில் சுண்டுவிரல் நுழையத் தக்க துவாரமும், சிறிய கலத்தின் கீழ்முறத்தில் உளுந்து நுழையும் அளவுக்கு மூன்று சிறிய துவாரங்களும் நெருங்கச் செய்து, பெரிய கலத்தின் மேற்புறத்தின் வழியாகப் புகை வெளியாகதிருக்க அவ்விடத்தில் சிறு ஓட்டினால் மூடி, அதன்மேல் பசுஞ்சாணம் வைத்து மூட வேண்டும். பின் பெரிய கலத்தை அடுப்பேற்றி அடுப்பிற்கும் கலத்திற்கும் உள்ள இடைவெளியை மண்ணால் பூசி தீயெரிக்கும்போது சிறிய கலத்தில் உள்ள துவாரங்களின் வழியாகத் தைலம் இறங்கும்.
ஒரு குடுவையின் அடியில் மூன்று சிறு துவாரங்களிட்டு, அதனுள் தைலம் இறக்க வேண்டிய சரக்குகளை இட்டு வாயைமூடி சீலைமண் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பூமியில் பள்ளம் தோண்டி அதனுள் பீங்கான் பாத்திரத்தை வைத்து, அதன் நடுவில் முன்சொன்ன குடுவையின் அடிபாகத்திலிட்ட துவாரம் நடுவில் இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். பின் குடுவை மறைய எருவை அடக்கிப் புடம் போடத் தைலம் முழுவதும் அடியில் உள்ள பீங்கானில் இறங்கி இருக்கும். அதனை எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
சுடர் தைலம் பெறவேண்டிய சரக்கை எண்ணையில் முன்னரே ஊறப்போட்டு வைத்திருந்தாவது அல்லது சரக்குகளைக் கல்வத்திலிட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அரைத்து ஒரு சீலையில் தடவித் திரியாகச் சுற்றி வைத்திருந்த சரக்கை நீண்ட குறட்டினை உபயோகித்து பற்றிப் படித்துக் கொள்ள வேண்டும். பின் அந்தச் சரக்கைத் தீயிட்டு எரியச் செய்து அதனடியில் ஒரு கோப்பையை வைத்துச் சரக்கின் மேல் ஊற்றும்படி கூறப்பட்ட நெய்வகைகளில் ஏதேனும் ஒன்றை சுடரின் மேல் சிறிது சிரிதாக ஊற்ற எரிந்து கீழே உள்ள பாத்திரத்தில் சொட்டும். இதனை எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
ஒரு மண்கலத்தில் இரண்டு அல்லது மூன்று விரற்கடை மணலை நிரப்பி அதன்மீது ஏழு சீலை செய்து மருந்திட்ட காசிக்குப்பியை வைத்துக் கழுத்தளவு மணல் கொட்டி பரப்பிப் பாகத்தில் கூறிய வண்ணம் குப்பியின் வாயைமூடியோ அல்லது மூடாமலோ எரித்தெடுக்க பயன்படும் இயந்திரமாகும்.
ஒரு முழ அகலமும், ஒரு சாண் உயரமும் உள்ள இரண்டு சட்டிகளை களிமண்ணால் அடிபகுதி மட்டமாகவும், ஒரு சட்டியின் வாய்க்குள் மற்றொன்று பொருந்துமாறும் அமைக்க வேண்டும்.
பூமியில் ஒரு குடுவையைப் புதைத்து அதன் கழுத்தில் துருத்தியின் குழை நுழையும்படி துளை செய்து சொருகி இடைவெளி இல்லாமல் மண்பூசி துருத்தியை தரைமட்டத்திற்கு மேலே ஊதுவதற்கு வசமாய் அமைத்துக் கொள்க. பின் குடுவையின் வாய்க்குப் பொருத்தமான ஒரு அகலின் மத்தியில் மூன்று சிறு துவாரமிட்டு வாய்மூடி இடைவெளி இல்லாமல் மண்பூசி அதனைச் சுற்றி நாலு அல்லது ஐந்து அங்குல உயரமுள்ளதாக மண்மேடு அமைந்து உலை வாய் கட்டவும். இதுவே உலோகம் உருக்கவும், செந்தூரம், சுண்ண வகைகள் முடிக்கப் பயன்படும் ஊது இயந்திரமாகும்.
தீநீர் அல்லது திராவகம் எடுக்க வேண்டிய சரக்குகளை ஒரு மண்கலத்திலிட்டு அதற்குத் தகுந்த மண்வாலை அமைத்துச் சீலைமண் செய்து காயவிட வேண்டும். பிறகு அடுப்பேற்றி எரிக்கும்போது வாலையின் மேல் குழையை அடைத்துக் குளிர்ந்த நீர் ஊற்றி வைக்க அந்த நீரானது சிறிது சிறிதாக வெப்பமாகும். அவ்வாறு நீர் வெப்பமடையும் போதெல்லாம் குழையை திறந்து பழைய நீரை வெளியேற்றியபின் மீண்டும் குளிர்ந்த நீரை விட்டு எரிக்க உட்புறமாக எழும் ஆவியானது நீராக உள்பகுதியில் நிரம்பி கீழ்குழையின் வழியாகச் சொட்டும். இதுவே தீநீர் அல்லது திராவகம் இறக்கப் பயன்படும் உயர்ரக வாலையாகும்.
முன்கூறப்பட்ட வாலையில் நீர்விடும் மேல் பாகத்தின் நடுவில் நீர் தங்கும் அளவிற்குமேலாக உயரம் இருக்கும் பொருட்டு ஒரு குழை அமைத்துக் கொள்ளவும். ஒருமுறை சரக்குகளைக் கலத்திலிட்டு திராவகம் பெற்றபின் மீண்டும் அதே அளவான சரக்கையிட்டு வாலையை சொருகி சீலை செய்து காய்ந்தபின் அடுப்பேற்றி எரிக்கும் தருவாயில் முன்பு பெறப்பட்ட திராவகத்தை புதிதாக மேல்பகுதியில் அமைத்த குழையின் வழியாக ஊற்ற, திராவகமானது மண்கலத்தின் அடியில்சென்று புதிதாக உள்ள சரக்குடன் கலக்கும். பின் அந்தக் குழையை கல்கார்க் மூலம் அடத்துவிட்டு முன்போல நூர் ஊற்றி எரிக்கத் திராவகம் விரைவில் வெளியேறும்.
(குறிப்பு:-
1) முதல்முறை திராவம் பெற்றவுடன் மறுமுறை திராவகம் பெறுமுன் அடிக்கலத்தை மாற்ற வேண்டும். வாலையை மட்டும் திராவகம் பெற்ற பின் நீரில் மூழ்கும் படி 3 மணி நேரம்வரை ஊறப்போட்டு உலர்த்த வேண்டும்.
2) இந்தத் திராவகமானது அதிக காரமானது. இதனைப் பிணியாளர்க்கு உள்ளுக்கு கொடுக்க வேண்டின், சாதாரணமாக ஒருமுறையில் கிடைக்கும் திராவகத்தினுடைய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவாகக் கொடுக்க வேண்டும்.)