வியாழன், 8 ஏப்ரல், 2021

ரோக நிதானம் - சுரத்தால் பிறக்கும் துணை நோய்கள்

        சுர நோயின் கேட்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதாகச் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுவதிலிருந்து சுரமானது பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழிவகை செய்து நமக்குக் கேடு விளைவிக்கும் என்று உணர வகையாகிறது. இதைக் கீழ்கண்ட பாடல் உணர்த்தும்.


சுரமதே கனலதாகும் சுரமதே சீதமாகும்
சுரமதே தோடமாகும் சுரமதே சோகையாகும்
சுரமதே மேகமாகும் சுரமதே கபமுமாகும்
சுரமதே (அதி)சாரமாகும் சுரமதே தாகமாமே.

சுரமதே வறட்சியாகும் சுரமதே ரத்தமாகும்
சுரமதே சீழுமாகும் சுரமதே மஜ்ஜையாகும்
சுரமதே கணையதாகும் சுரமதே இருமலாகும்
சுரமதே க்ஷயமதாகும் சுரமதே பொருமலாமே.

சுரமதே சூலையாகும் சுரமதே சொறியதாகும்
சுரமதே விரணமாகும் சுரமதே பித்தமாகும்
சுரமதே வாதமாகும் சுரமதே வாய்வுமாகும்
சுரமதே ஈளையாகும் சுரமதே இழுப்புமாகும்.


சுரமதே கனலதாகும் - சுரத்தின் கேடால் உடல் வலிமை குறைந்து, பித்தம் மிகுந்து, இரத்தம் குறைந்து, நீர்க்கடுப்பு, எலும்புருக்கி எனும் வெப்ப நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே சீதமாகும் - சுரத்தின் கேடால் பித்தவாதம் அல்லது ஐயம் அதிகரித்து, வெப்பம் குறைந்து, குரல் கம்மல், கீல்களில் வீக்கம் முதலிய சீதளம் தொடர்பான நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே தோடமாகும் - சுரம் இருக்கும் போதும், சுரம் விட்ட போதும் பத்தியங்கள் தவறுவதால் உடலின் ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது அனைத்துமோ பாதித்துச் சந்நிபாதம் காணும்.

சுரமதே சோகையாகும் - சுரத்தின் கேடால் பித்தம் அதிகரித்து இரத்தம் நீர்த்து வற்றிப்போகும். இதனால் பாண்டு, சோகை, காமாலை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்புகள் உண்டாக்கும்.

சுரமதே மேகமாகும் - சுரத்தின் கேடாலும், சுரம் கொண்ட காலத்தில் அதிக உணவு அல்லது மிகக் குறைந்த உணவு, அளவுக்கு மீறிய உழைப்பு, தகாத நடத்தை போன்ற காரணங்களால் அடிவயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, குறியின் நாளம் இவைகளில் வீக்கமும், புண்ணும் உண்டாகி, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், வெள்ளை வெட்டை, பிரமேகம், பிரமியம் எனும் நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே கபமுமாகும் - சுரத்தின் கேடால் இரத்தம் குறைந்து, நுரையீரல் வெப்பமடைந்து, அதன் வலிமையும், செயலும் கெட்டு, கபம் மிகுந்து இருமல், ஈளை, இளைப்பு போன்ற நோய்கள் உண்டாகி உடலை வற்றச் செய்யும்.

சுரமதே (அதி)சாரமாகும் -  நாட்பட்ட சுரத்தின் கேடால் உடல் வலிமை கெட்டு, உணவு செரிக்கும் சக்தி கெட்டு, மூலத்தில் வாய்வு தங்கி, பெருங்கழிச்சல் எனும் அதிசாரம் காணும்.

சுரமதே தாகமாகும் - சுரத்தின் கேடால் உடல் வலிமை குன்றி நாவு, கண்டம் (கழுத்து), தாடை, நரம்பு இவைகளில் வெப்பம் உண்டாகி நீர் வேட்கையை உண்டாக்கும்.

சுரமதே வறட்சியாகும் - சுரத்தின் வேகம் தணியாமல் அது உடலில் பரவி, உடலை வாட்டி உலர்த்தி, இரத்தம் குறைந்து, சோபை, எலும்புருக்கி எனும் நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே இரத்த(பித்த)மாகும் - சுரத்தின் கேடால் இரத்த பித்தம், இரத்த காசம், இளைப்பு எனும் நோய்கள் உண்டாகும்.

சுரமதே சீழுமாகும் - சுரத்தின் கேடால் ஆம தோடம் உண்டாகி சீழுடன் கூடிய கட்டிகள், பிளவைகள் இவற்றை உண்டாக்கும்.

சுரமதே மஜ்ஜையாகும் - சுரத்தின் கேடால் எலும்பிலும், மூளையிலும் வெப்பம் அதிகரித்து கொழுப்பு தாதுவைக் குறைக்கும். உடல் வற்றும்.

சுரமதே கணையதாகும் - சுரத்தின் கேடால் குழந்தைகளுக்குக் கணை எனும் நோய் காணும்.

சுரமதே இருமலாகும் - சுரத்தின் கேடாலும், மருந்தின் வேகத்தாலும் இருமல் நோய் உண்டாகும்.

சுரமதே க்ஷயமதாகும் - சுரத்தின் வேகத்தால் குருதியைக் கெடுத்து உடலை இளைக்கச் செய்து இளைப்பு நோயை உண்டாக்கும்.

சுரமதே பொருமலாகும் - சுரத்தின் கேடால் செரிமான திறன் குறைந்து, வாத, பித்தம் கேடடைந்து, வயிற்றில் வாயு மிகுந்து, வயிறு பொருமலை உண்டாக்கும்.

சுரமதே சூலையாகும் - சுரத்தின் கேடால் குருதி கெட்டு எலும்புகளின் சந்திகளில் (கீல்கள்) நீர் தங்கி மூட்டுகளில் அதிக வலியை உண்டாக்கும். இது சூலைநோய் எனப்படும்.

சுரமதே சொறியதாகும் - சுரத்தின் கேடால் செரிமானம் கெட்டு, அது குருதியைக் கெடுத்து, வலிமை குறைந்து, தோல் வெப்பமடைந்து சொறி நோயை உண்டாக்கும்.

சுரமதே விரணமாகும் - விஷக் கடிகளால் உண்டாகும் சுரம் குணமடைந்த பிறகும் அல்லது  மற்றும் நாட்பட்ட சுரம் சொறி, சிறங்கு, கொப்புளம், புண், புரைகள் இவற்றை உண்டாக்கும்.

சுரமதே பித்தமாகும் - சுரத்தின் கேடால் அறிவு கலங்கி பைத்தியம் என்ற நோயை உண்டாக்கும்.

சுரமதே வாதமாகும், சுரமதே வாய்வதாகும் - சுரத்திற்கு தரும் மருந்துகளின் வேகம் அதிகமாக இருக்கும்போது மலமும், சலமும் கட்டுப்பட்டு, வாத நோயையும், குடலில் வாயுவை அதிகரிக்கவும் செய்யும்.

சுரமதே ஈளையாகும் - சிலவகை சுரங்களில் வாதத்தின் வலிமை குறைந்து, நுரையீரலில் கபம் அதிகரித்து, மூச்சு விட இயலாதவாறு ஈளை நோய் உண்டாகும்.

சுரமதே இழுப்புமாகும் - சுரத்தின் கேடால் கபம் அதிகரித்து, மலமும் ஒரே நேரத்தில் தடைபடும்போது இழுப்பு எனும் இரைப்பு நோய் உண்டாக்கும்.

மேலும் சுரநோயினால் முக்குற்ற நோய் என்று அழைக்கப்படும் சந்நிபாதம் அல்லது சன்னி என்ற நோயும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக