வியாழன், 8 ஏப்ரல், 2021

ரோக நிதானம் - பெண்களுக்கு உண்டாகும் நோய்கள்

மலட்டு ரோக நிதானம் :
        சுக்கில சுரோணிதங்களில் முக்குற்றத்தினாலும், பிறவிப் பாவத்தாலும் மலட்டுரோகம் உண்டாகும். அது ஆண்மலடு, பெண்மலடு என இருவகைப்படும்.

ஆண் மலடு :
ஆண்களின் விந்துவானது இனிப்பு இல்லாததும் சலத்தில் விட்டால் கரைந்து மிதப்பதும், உயிர்ப்பற்றதும், மூத்திரத்தில் நுரைகட்டுவதுமா யிருக்குமாயின் அதனால் கர்ப்பந்தரிக்கமாட்டாது.

பெண் மலடு :
மலட்டு தோஷங்கள் :
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் இரத்தத்தின் நிறத்தைக் கொண்டு அவர்களின் மலட்டு தோஷங்களின் சாத்திய அசாத்தியங்களை அறியலாம். அவையாவன,
  1. சிவந்தும், கறுத்தும் வெளிவந்தால் வாத தோஷம்
  2. மஞ்சள் அல்லது நீல நிறமாக வெளிவந்தால் பித்த தோஷம்
  3. சீழைப் போல் வெளுப்பாக வெளிவந்தால் ஐய தோஷம்
  4. பிரேத ரத்தத்தைப்போல் திரள் திரளாக வெளிவந்தால் ரத்தபித்த தோஷம்
  5. உதிரமானது கண்டு உடனே மறைந்தால் வாத பித்த தோஷம்
  6. மல மூத்திர நிறமாக வந்தால் சந்நிபாத தோஷம்
இவற்றுள் வாத பித்த கப தோஷங்கள் சாத்தியம். தொந்த தோஷங்கள் கஷ்ட சாத்தியம். சந்நிபாத தோஷம் அசாத்தியமாம்.


யோனி தோஷங்கள் :
        கணவன் புணரும்போது அந்தப் பெண்ணுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து அவளுக்கு இருக்கும் யோனி தோஷங்களை அறியலாம். அவையாவன,

  1. தலைநோய் கண்டால் கருக்குழியில் பாரம் அல்லது கிருமி இருக்கும்
  2. உடல் முழுதும் வலி கண்டால் கருக்குழியில் வாயு இருக்கும்
  3. நெஞ்சுவலி கண்டால் யோனி சுருங்கி தசை வளர்ந்திருக்கும்
  4. முதுகில் வலி கண்டால் யோனியில் கிருமி நிறைந்திருக்கும்
  5. கண்டசதை வலி கண்டால் யோனியில் ரத்தம் கட்டி இருக்கும்
  6. ஏப்பம் கண்டால் யோனி மதத்து கொழுப்படைந்து இருக்கும்
  7. விந்து சேராமல் நஷ்டப்படுமாகில் பேயினாலும், பயத்தினாலும் இருக்கும்

மலட்டு நோய்கள் :
  1. ஆதிமலடு - வயிற்றில் மூன்று மடிப்பு விழுந்து இடுப்பு பருத்து காணும்
  2. காக மலடு - இரண்டு பிள்ளைக்குப் பிறகு குழந்தை இல்லாதிருப்பது.
  3. கதலிமலடு - ஒரு பிள்ளையைப் பெற்ற பிறகு குழந்தை இல்லாதிருப்பது.
  4. கருப்ப மலடு - வயிற்றிலே பிள்ளை செத்து செத்து விழுவது.

பெரும்பாடு (Menorrhagia) நோய் நிதானம் :
        பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாக வெளியாதல் பெரும்பாடு எனப்படும். இது 4 வகைப்படும்.

பெரும்பாடு வரக் காரணங்கள் :
        அதிக உஷ்ண வீரியப் பொருள்களை உண்ணுதல், அதிக உணவு, அசீரணம், கருப்பை அழற்சி, அதிக போகம், மலை முதலியவை ஏறுதல், அதிக நடை, அதிக துக்கம், தடி முதலியவைகளால் அடிபடல், பகல் உறக்கம் இவற்றால் பெரும்பாடு நோய் ஏற்படும்.

பெரும்பாட்டின் பொதுக் குணங்கள் :
        பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாகவும், நிறம் மாறியும் காணுதல், நீடித்து இருத்தல், வயிற்றில் வலி, உடல் பலவீனம் முதலிய குணங்களைப் பெற்றிருத்தால், மயக்கம், தாகம், மதம், அதிக கோபம், உணவில் வெறுப்பு, உடல் வெளிரல், நமைச்சல், வாந்தி எனும் இக்குணங்கள் காணும்.

1. வாதப் பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது அற்பமாயும் சிவந்து, நுரையுடன், புலால் கழுவிய நீரைப் போல் சிறிது சிறிதாக வெளியாகும்.

2. பித்தப் பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறங்களாகவும், அதி உஷ்ணமாகவும், அதிவேகமாக இரத்தம் வெளியாகும்.

3. ஐய பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது விஷத்தைப் போலும், சீதத்தைப் போலும், வெண்ணிறத்திலும், சாதம் வடித்த நீர் போல் உதிரம் வெளியாகும்.

4. முக்குற்ற பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது தேன், நெய், அரிதாரம் இவைகளின் நிறத்திலும், கொழுப்பைப் போலும், பொறுக்க இயலாத நாற்றத்துடனும், இரத்தம் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக