பொதுவாக ஒரு குழந்தை 16 வயது வரை உண்டாகும் நோய்கள் குழந்தை நோய்கள் என்று கூறுவர். இந்த நோய்கள் உண்டாகக் காரணம் அதன் பெற்றோரேயாகும். இவ்வாறு குழந்தைகளுக்கு நோய்கள் உண்டாகும் பொதுவாகக் கருவில் தோன்றுவது, பாலுண்ணும்போது தோன்றுவது, பாலும் குடித்து சோறும் உண்ணும்போது தோன்றுவது, சோறு மட்டும் உண்ணும்போது தோன்றுவது என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள் என்பவை கிரந்தி, தோடம், மாந்தம், கணம், கரப்பான், அக்கரம், சுரம், சன்னி, சன்னிவாதம், கழிச்சல், வலிப்பு, சோகை, பாண்டு, காமாலை, கக்குவான், செவிநோய், புழு / கிருமி நோய், மலவாதம், வைசூரி / அம்மை என்பவையாகும்.
கிரந்தி நோய் :
இது குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம்வரையில் முக்குற்ற கலப்பின் மிகுதியால் உண்டாகும். இவை 2 வகைப்படும்.
1) செங்கிரந்தி : குழந்தை பிறந்தவுடன் விடாமல் ஒரே அழுகையாய் அழுது, பின் அழ இயலாமல் தொண்டையைக் கட்டி, பூனையின் குரலைப் போல் ஒலிக்கும். இதில் சிறுநீர், மலம் கட்டுப்பட்டு, வயிறு ஊதி, கையில் தங்காமல் துள்ளும். கைகால் சிவந்து சிறு கொப்புளங்கள் காணும்.
2) கருங்கிரந்தி : குழந்தை பிறந்து 5 நாளுக்குள் சுரமுடன், வாய் வறண்டு, உதடு கறுத்து, குரல் கம்மி, கூச்சலிட்டு அழும். வயிறு உப்பி, வருந்தி வருந்தி அழுது, வலிப்பு காணும். கண் திறக்காது, எந்நேரமும் மயங்கிக் காணும், பாலுண்ணாது. இதோடு உடல் முறித்து விம்முதல், கண்கள் மிரண்டு விழித்தல், முகம் வாடல், வயிற்றில் புழு இருத்தல் எனும் குணங்கள் கண்டால் 5 நாளில் மரணம் நேரிடும்.
தோடம் :
இந்நோய் குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் முதல் ஒரு ஆண்டு வரையில் காணும். இவை குழந்தைகள் தமக்கு ஒவ்வாத ஒன்றை ஐம்புலன்களால் அறிவதால் உண்டாகும். இந்தத் தோடங்கள் பட்சியால் - 4, பறவையால் - 1, புள்ளால் - 10, யட்சினியால் - 1, எச்சிலால் - 1, பெண்ணால் - 6, ஆணால் - 1, தேரையால் - 1 என ஆக மொத்தம் 25 வகைப்படும்.
தோடங்களின் வகைகள் :
- ஆண்பட்சி தோடம்
- பெண்பட்சி தோடம்
- அலிப்பட்சி தோடம்
- மலட்டுப்பட்சி தோடம்
- பறவை தோடம்
- வீங்குபுள் தோடம்
- தூங்குபுள் தோடம்
- விளக்கொளிக்கண் புள் தோடம்
- வெங்கண் புள் தோடம்
- வரட்கண்புள் தோடம்
- நீர்ப்புள் தோடம்
- பேய்க்கண்புள் தோடம்
- செங்கண்புள் தோடம்
- கருங்கண்புள் தோடம்
- அந்திப்புள் தோடம்
- யட்சிணி தோடம்
- ஆண் தோடம்
- மாதவிலக்குற்றவள் பார்த்த தோடம்
- எடுத்த தோடம்
- கரு அழிந்தவள் பார்த்த தோடம்
- கணவனுடன் கூடினவள் குளிக்குமுன் பார்த்த தோடம்
- பிள்ளை விரும்பிக் குலிசம் கட்டினவள் பார்த்த தோடம்
- கருச்சிதைவுற்றவள் பார்த்த தோடம்
- தேரை தோடம்
- எச்சில் தோடம்
தோடங்களின் பொதுக் குணங்கள் :
- பலநிறங்களில் மலம் கழிதல்
- உச்சியில் குழிவிழுதல்
- கண்கள் குழிவிழுதல்
- வாய் உலர்தல்
- கைகால் குளிர்தல்
- சிறுநீர் கடுத்தல்
- மூச்சு வாங்குதல்
- இளைப்பு
- பால் எதிரெடுத்தல்
- வாந்தி
- மயக்கம்
தோடங்களின் பொதுக் குணங்கள் :
1) பட்சி தோடங்களில் - வயிறு உப்பும், தண்ணீராய் பேதியும், வாந்தியும் கண்டு, கண்கள் குழிவிழும், விட்டு விட்டுச் சீறி அழும், பாலுண்ணாது, தலையைத் தூக்க முடியாமல் பளுவாக இருந்து வலிக்கும், கண்ணில் அதிக பீளை, முகம் சிறுத்தல், கடுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.
2) பறவை தோடத்தில் - குடித்த பால் செரியாமல் வாந்தி, தாகம், உடல் - நெற்றியில் வலி, ஏக்கம், திடுக்கிடல், நா வரளல், கண்கள் வெளுத்துக் குழி விழுதல், முகம் மஞ்சளாதல், மூச்சு வாங்குதல், தூங்காமல் சீறி அழுதல், தலையுச்சியில் பள்ளம், கடுப்பு, பேதி, கையில் தங்காமல் சீறுதல், சுரம் எனும் குணங்கள் காணும்.
3) புள் தோடத்தில் - தலை உச்சியும் - கண்ணும் குழிவிழுதல், பாலைக் கக்குதல், பச்சை நிற பேதி, பறவையின் குரலைப் போல் சீறி அழுதல், உடல் இளைத்தல், நினைவின்றி சோர்தல் எனும் குணங்கள் காணும்.
4) யட்சிணி தோடத்தில் - உடல் இளைத்து பல நிறத்துடன் நாறும், பாலுண்ணாமை, தாயை அருவெறுப்புடன் பார்த்தல், மற்ற குழந்தைகளைப் வெறித்துப் பார்த்தல், இரத்தம் சூடாகி தலைக்கேறி மயக்கம் காணும், கண்கள் வறண்டு பீளை காணுதல், அடிக்கடி கழிதல், பதறி அழுதல், கண்ணைக் கசக்கல், மாலைச் சுரம், பித்தம் எனும் குணங்கள் காணும்.
5) எச்சில் தோடத்தில் - உடல் வாடி இயற்கை நிறம் மாறும், சுரம் காய்ந்து பலமுறை பேதியாகும், கண்கள் ஒட்டிக்கொண்டு நிமிண்டி அழும், பாலுண்ணாமை, தாயைப் பார்த்துச் சீறி அழுதல், தலை தூக்க இயலாமல் மயங்கி அழுதல் எனும் குணங்கள் காணும்.
6) பெண் தோடத்தில் - நெஞ்சு வறண்டு, கண் குழி விழுந்து - பஞ்சு போல வெளுக்கும், விட்டு விட்டு அலறும், உடல் சுருங்கி வியர்க்கும், மயக்கம், தூக்கமின்மை, பெருமூச்சு, பாலுண்ணாமை, வயிறு வலித்துச் சுளுக்கி முகம் கருகியது போலக் காணுதல் எனும் குணங்கள் காணும்.
7) ஆண் தோடத்தில் - உச்சியில் பள்ளம் விழும், கண்கள் குழிந்து, கழுத்து சுருங்கும், பால் தங்காது வாந்தியாகும், அடிக்கடி பேதி, பொருமி சீறி அழும் எனும் குணங்கள் காணும்.
8) தேரை தோடத்தில் - உடல் வற்றி உலர்ந்து போதல், கட்டிப்போட்டது போல நொந்து வறண்டு வெளிரும், கைகால் முடங்கி வரளும், வயிறு புடைத்துத் தொப்புள் மலரும், கண்சிறுத்தல், மலம் தீய்ந்து போதல், செவிகேளாமை, மார்புக்கூடு வெளித்தள்ளல், எவ்வளவு பால் உண்டாலும் உடல் தேராமை எனும் குணங்கள் காணும்.
இந்த வகை தோடங்களில் உடல் கறுத்து, அதிகம் இளைத்து, வயிறு ஊதி, நீராகவும் - சீதமாகவும் பேதியாதல், மலவாய் வெளித்தள்ளல், சுரமுடன் கண் குழி விழுதல், பாலுண்ணாமை, கண்கள் மிகசொருகி மயங்குதல் எனும் குணங்கள் கண்டால் அசாத்தியம் ஆகும்.
மாந்தம் (மந்தம்) :
மாந்தம் அல்லது மந்தம் என்பது குழந்தையின் உடல் மற்றும் உள்ளத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலையை குறிக்கும். இது குழந்தையின் முதல் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரையில் உண்டாகும். இந்த நோய் உண்டாக முக்கிய காரணம் தாயின் உணவு முறையில் உண்டாகும் மாற்றங்கள் மற்றும் தவறுகளேயாகும். இதன் காரணமாகக் குழந்தையின் வயிற்றில் அக்கினி மந்தம் அடைந்து செரிமானம் பாதிப்படையும். இது 21 வகைப்படும்.
மாந்தத்தின் பொது குணங்கள் :
கால் குளிர்தல், வயிறு கழிதல், அடிக்கடி அழுதல், கண்கள் சோர்தல் எனும் குணங்கள் காணும். இது சாத்தியம்.
மாந்தம் அதிகமானால் வாய்வெந்து புண்ணாதல், சுரம், இருமல், வயிறு கடுத்து இரத்தம் போதல், கழிச்சல், கையில் தங்காமல் அழுதல், அறிவழிதல், கைகால் வீங்குதல், இடுப்புக்கு கீழ் குளிர்தல் காணும். இது அசாத்தியம்.
மாந்தத்தின் வகைகள் :
- பால் மாந்தம்
- வாயு மாந்தம்
- கல் மாந்தம்
- தொங்கல் மாந்தம்
- நீர் மாந்தம்
- வலி மாந்தம்
- அக்கினி மாந்தம்
- புழு மாந்தம்
- உழத்து மாந்தம்
- கட்டு மாந்தம்
- அமர் மாந்தம்
- முத்தோட மாந்தம்
- சன்னி மாந்தம்
- செரியா மாந்தம்
- ஆனாக மாந்தம்
- விஷ மாந்தம்
- ஊது மாந்தம்
- பழ மாந்தம்
- போர் மாந்தம்
- நெய் மாந்தம்
- பேய் மாந்தம்
மாந்தம் உண்டாகக் காரணங்கள் :
குழந்தைக்குப் பாலூட்டும் காலங்களில் தாய் சருகு ஊறிய நீர், எருமை பால் - தயிர் - மோர் - நெய், வாழை, மா, தேங்காய், இளநீர், கடலை, வெல்லம், துவரை, மொச்சை, புளியவிதை, பருப்பு உருண்டை, அதிரசம், வாயுப் பொருட்கள், சோறு, பழைய உணவுகள் இவற்றை அதிகமாக உண்பதாலும், விரால் - கெண்டை - உளுவை - வாளை மீன்கள், பாகல், கள், மாமிசம் இவற்றை உண்பதால் சுரம் அடித்தல் போன்றவற்றாலும், தாய்க்கு மலச்சிக்கல் மிகுந்து உடல் கனத்து இருக்கும்போதும் அவள் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தைக்கு மயிர்க்கூச்சமுடன், சுரமும், கழிச்சலும் உண்டாகும்.
இதன் காரணமாகக் குழந்தைக்கு உடல் இளைத்தல், கறுத்தல் - வெளுத்தல், வயிறு ஊதல், வயிறு நொந்து கடுத்தல், உடல் வியர்த்து, வெப்பு நாற்றம் வீசுதல், கண்கள் சிவந்து - சுழன்று - சொருகி குழிவிழுந்து காணுதல், முகம் பலவாறு வெளுத்து மினுமினுத்தல், கையில் தங்காமல் அழுதல், விடாத சுரம், சோர்வு, மருண்டு பார்த்தல், கொட்டாவி, குரல் கம்மல், கைகால் குளிர்ந்து பின்னிக் கொள்ளுதல், மயக்கம், சிறுநீர் கடுத்து சிவந்து இறங்குதல், அதிக துர்நாற்றத்துடன் பலவித நிறங்களில் மலம் கழியும் எனும் குணங்கள் காணும்.
கணம் (கணை) :
இது குழந்தை பாலும் குடித்து சோறுண்ணும் காலத்தில் குழந்தையின் மூன்றாம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டுவரையில் வரும். இந்நோயில் பலவித நோய்களின் குணங்கள் தொகுப்பாக இருப்பதால் இது கணம் என்று அறியப்பட்டது. இந்நோய் அதிக சூட்டினால் கபம் அதிகரிப்பதாலும், பலவித நீரை அருந்துவதாலும், மாந்த நோயினால் அதிகம் பாதித்த வேளையிலும், பசியுடன் இருக்கும் தாயின் பாலை அருந்துவதாலும் உண்டாகிறது. இது 18 வகைப்படும். சில நூல்களில் 24 வகை என்றும் உள்ளது.
கணை நோயின் வகைகள் :
- வாத கணம்
- பித்த கணம்
- தூங்கு கணம்
- சுர கணம்
- மூல கணம்
- இரத்த கணம்
- வரள் கணம்
- வெப்பு கணம்
- வாலசந்திர கணம்
- வீங்கு கணம்
- வெளுப்பு கணம்
- சத்தி கணம்
- மாந்த கணம்
- அத்திசுர கணம்
- மஞ்சள் கணம்
- நீல கணம்
- மகேந்திர கணம்
- அனல் கணம்
கணம் (கணை) நோயின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் மூலச்சூடு அதிகரித்து வாயுவை அழுத்துவதால் பித்தம் தணிய வழியில்லாது உள்சுரமுடன் அனலாகக் காய்ந்து, உடல்வற்றி - மெலிந்து - சோர்ந்து - துவளும், வாயும் நாவும் உலர்ந்து - வறண்டு - வேக்காடு அடைந்து புண்ணாகும், வாய் நீரும் - கோழையும் நுரைத்து வடியும், தொண்டைக்கட்டி குரல் கம்மும், நுரையீரலில் கபம் அதிகரித்து புகைந்து இருமும், கண்ணின் நிறம் மாறிப் பஞ்சடைத்து - வெளுத்து - சுழன்று - வெறித்துப் பார்க்கும், மலம் தீய்ந்து வெளியாகும், சிறுநீர் கடுத்து இறங்கும், மார்புக்கூடு மேலெழும்பி காயும், வயிறு உப்பி - நொந்து - இரைந்து - வெதும்பிக் கழியும், கைகால் - முகம் கறுத்து சில சமையம் எரியும் - குளிரும் - வீங்கும், வயிறு - ஈரல் - கழுத்து - நெஞ்சு - தொண்டை - முகம் - மார்பு வீங்கும், மூக்கில் நீர் வடியும், வாய் நாறும், பலவிதமாக மலம் கழியும், மயக்கம், கிறுகிறுப்பு, தலை உச்சியில் குழி விழும் எனும் குணங்கள் காணும்.
அக்கரம் (வாய் - நாக்கு புண்) :
இந்நோய் மூலத்தில் கிளம்பும் ஆவியானது மேலெழும்பி நாக்கு மற்றும் வாயில் வேக்காட்டை உண்டாக்கி, மாவு போல நீறுபூத்து, புண்ணாகி, பலவித துன்பங்களை உண்டாக்கும். இது 8 வகைப்படும். சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்படுகிறது. இந்த நோயுடன் நா முள், நாக்கு நாற்றம் எனும் நோய்களும் துணை நோய்களாகத் தோன்றும்.
அக்கரம் வகைகள் :
- சூலி அக்கரம்
- நீதி அக்கரம்
- சோதி அக்கரம்
- வீமி அக்கரம்
- குண்டி அக்கரம்
- கபாலி அக்கரம்
- குமரி அக்கரம்
- உள்அக்கரம்
- கறுத்த அக்கரம்
- சிவந்த அக்கரம்
- வெள்ளை அக்கரம்
- ஈரல் அக்கரம்
- வாய் அக்கரம்
அக்கரம் பொதுக் குணங்கள் :
இந்நோயில் பொதுவாக நாக்கில் மாவு போன்ற படிந்து - வெளுத்து - அடியாக வெடித்து - உலர்ந்து - வெந்து - புண்ணாகும், வயிறு பொருமல், கழிச்சல், நாவில் வெள்ளை நிற நீர் சுரக்கும், உடல் - கைகால் கறுத்து கடுக்கும், நாக்கு சிவந்து குத்தலுடன் உவர்மண்ணின் மணத்தை பெரும், உடல் கறுத்து - வெளுத்து இளைத்து நோகும், வாய் வறண்டு - வெந்து - கூசும் - கசக்கும் - நாற்றம் வீசும், மூன்று நாடிகளும் துடிக்கும், கணுக்கால் - இடுப்பு - கீல்கள் - விலா கடுக்கும், ஈரல் வேகும், நெஞ்சடைத்து எரிந்து கரிக்கும், ஆசனவாயில் குத்தும், தொண்டையில் ஒக்களித்து குரல் நெறியும், வயிறு நொந்து - இரைந்து - கழியும், உள்நாவு வரளும், உணவு செல்லாது, வாந்தி, தாகம், இருமல், குளிர், கடும்சுரம், தலைவலி, தூக்கம் காணும்.
இதுவரை கூறிய நோய்கள் தவிர சுரம், சன்னி, கழிச்சல், வலிப்பு, சோகை, பாண்டு, காமாலை, வைசூரி (அம்மை) எனும் நோய்களும் குழந்தைகளுக்கு உண்டாகும். இவைகளைப் பற்றி முன்பே விளக்கப்பட்டுள்ள காரணத்தால் இங்கே தனியாக விளக்கவில்லை.