வியாழன், 8 ஏப்ரல், 2021

ரோக நிதானம் - குழந்தை நோய்கள்

        பொதுவாக ஒரு குழந்தை 16 வயது வரை உண்டாகும் நோய்கள் குழந்தை நோய்கள் என்று கூறுவர். இந்த நோய்கள் உண்டாகக் காரணம் அதன் பெற்றோரேயாகும். இவ்வாறு குழந்தைகளுக்கு நோய்கள் உண்டாகும் பொதுவாகக் கருவில் தோன்றுவது, பாலுண்ணும்போது தோன்றுவது, பாலும் குடித்து சோறும் உண்ணும்போது தோன்றுவது, சோறு மட்டும் உண்ணும்போது தோன்றுவது என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள் என்பவை கிரந்தி, தோடம், மாந்தம், கணம், கரப்பான், அக்கரம், சுரம், சன்னி, சன்னிவாதம், கழிச்சல், வலிப்பு, சோகை, பாண்டு, காமாலை, கக்குவான், செவிநோய், புழு / கிருமி நோய், மலவாதம், வைசூரி / அம்மை என்பவையாகும்.


கிரந்தி நோய் :
இது குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம்வரையில் முக்குற்ற கலப்பின் மிகுதியால் உண்டாகும். இவை 2 வகைப்படும். 

1) செங்கிரந்தி : குழந்தை பிறந்தவுடன் விடாமல் ஒரே அழுகையாய் அழுது, பின் அழ இயலாமல் தொண்டையைக் கட்டி, பூனையின் குரலைப் போல் ஒலிக்கும். இதில் சிறுநீர், மலம் கட்டுப்பட்டு,  வயிறு ஊதி, கையில் தங்காமல் துள்ளும். கைகால் சிவந்து சிறு கொப்புளங்கள் காணும்.

2) கருங்கிரந்தி : குழந்தை பிறந்து 5 நாளுக்குள் சுரமுடன், வாய் வறண்டு, உதடு கறுத்து, குரல் கம்மி, கூச்சலிட்டு அழும். வயிறு உப்பி, வருந்தி வருந்தி அழுது, வலிப்பு காணும். கண் திறக்காது, எந்நேரமும் மயங்கிக் காணும், பாலுண்ணாது. இதோடு உடல் முறித்து விம்முதல், கண்கள் மிரண்டு விழித்தல், முகம் வாடல், வயிற்றில் புழு இருத்தல் எனும் குணங்கள் கண்டால் 5 நாளில் மரணம் நேரிடும்.

தோடம் :
        இந்நோய் குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் முதல் ஒரு ஆண்டு வரையில் காணும். இவை குழந்தைகள் தமக்கு ஒவ்வாத ஒன்றை ஐம்புலன்களால் அறிவதால் உண்டாகும். இந்தத் தோடங்கள் பட்சியால் - 4, பறவையால் - 1, புள்ளால் - 10, யட்சினியால் - 1, எச்சிலால் - 1, பெண்ணால் - 6, ஆணால் - 1, தேரையால் - 1 என ஆக மொத்தம் 25 வகைப்படும்.

தோடங்களின் வகைகள் :
  1. ஆண்பட்சி தோடம்
  2. பெண்பட்சி தோடம்
  3. அலிப்பட்சி தோடம்
  4. மலட்டுப்பட்சி தோடம்
  5. பறவை தோடம்
  6. வீங்குபுள் தோடம்
  7. தூங்குபுள் தோடம்
  8. விளக்கொளிக்கண் புள் தோடம்
  9. வெங்கண் புள் தோடம்
  10. வரட்கண்புள் தோடம்
  11. நீர்ப்புள் தோடம்
  12. பேய்க்கண்புள்  தோடம்
  13. செங்கண்புள் தோடம்
  14. கருங்கண்புள் தோடம்
  15. அந்திப்புள் தோடம்
  16. யட்சிணி தோடம்
  17. ஆண் தோடம்
  18. மாதவிலக்குற்றவள் பார்த்த தோடம்
  19. எடுத்த தோடம்
  20. கரு அழிந்தவள் பார்த்த தோடம்
  21. கணவனுடன் கூடினவள் குளிக்குமுன் பார்த்த தோடம்
  22. பிள்ளை விரும்பிக் குலிசம் கட்டினவள் பார்த்த தோடம்
  23. கருச்சிதைவுற்றவள் பார்த்த தோடம்
  24. தேரை தோடம்
  25. எச்சில் தோடம்

தோடங்களின் பொதுக் குணங்கள் :
  1. பலநிறங்களில் மலம் கழிதல்
  2. உச்சியில் குழிவிழுதல்
  3. கண்கள் குழிவிழுதல்
  4. வாய் உலர்தல்
  5. கைகால் குளிர்தல்
  6. சிறுநீர் கடுத்தல்
  7. மூச்சு வாங்குதல்
  8. இளைப்பு
  9. பால் எதிரெடுத்தல்
  10. வாந்தி
  11. மயக்கம்

தோடங்களின் பொதுக் குணங்கள் :
1) பட்சி தோடங்களில் - வயிறு உப்பும், தண்ணீராய் பேதியும், வாந்தியும் கண்டு, கண்கள் குழிவிழும், விட்டு விட்டுச் சீறி அழும், பாலுண்ணாது, தலையைத் தூக்க முடியாமல் பளுவாக இருந்து வலிக்கும், கண்ணில் அதிக பீளை, முகம் சிறுத்தல், கடுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

2) பறவை தோடத்தில் - குடித்த பால் செரியாமல் வாந்தி, தாகம், உடல் - நெற்றியில் வலி, ஏக்கம், திடுக்கிடல், நா வரளல், கண்கள் வெளுத்துக் குழி விழுதல், முகம் மஞ்சளாதல், மூச்சு வாங்குதல், தூங்காமல் சீறி அழுதல், தலையுச்சியில் பள்ளம், கடுப்பு, பேதி, கையில் தங்காமல் சீறுதல், சுரம் எனும் குணங்கள் காணும்.

3) புள் தோடத்தில் - தலை உச்சியும் - கண்ணும் குழிவிழுதல், பாலைக் கக்குதல், பச்சை நிற பேதி, பறவையின் குரலைப் போல் சீறி அழுதல், உடல் இளைத்தல், நினைவின்றி சோர்தல் எனும் குணங்கள் காணும்.

4) யட்சிணி தோடத்தில் - உடல் இளைத்து பல நிறத்துடன் நாறும், பாலுண்ணாமை, தாயை அருவெறுப்புடன் பார்த்தல், மற்ற குழந்தைகளைப் வெறித்துப் பார்த்தல், இரத்தம் சூடாகி தலைக்கேறி மயக்கம்  காணும், கண்கள் வறண்டு பீளை காணுதல், அடிக்கடி கழிதல், பதறி அழுதல், கண்ணைக் கசக்கல், மாலைச் சுரம், பித்தம் எனும் குணங்கள் காணும்.

5) எச்சில் தோடத்தில் - உடல் வாடி இயற்கை நிறம் மாறும், சுரம் காய்ந்து பலமுறை பேதியாகும், கண்கள் ஒட்டிக்கொண்டு நிமிண்டி அழும், பாலுண்ணாமை, தாயைப் பார்த்துச் சீறி அழுதல், தலை தூக்க இயலாமல் மயங்கி அழுதல் எனும் குணங்கள் காணும்.

6) பெண் தோடத்தில் - நெஞ்சு வறண்டு, கண் குழி விழுந்து - பஞ்சு போல வெளுக்கும், விட்டு விட்டு அலறும், உடல் சுருங்கி வியர்க்கும், மயக்கம், தூக்கமின்மை, பெருமூச்சு, பாலுண்ணாமை, வயிறு வலித்துச் சுளுக்கி முகம் கருகியது போலக் காணுதல் எனும் குணங்கள் காணும்.

7) ஆண் தோடத்தில் - உச்சியில் பள்ளம் விழும், கண்கள் குழிந்து, கழுத்து சுருங்கும், பால் தங்காது வாந்தியாகும், அடிக்கடி பேதி, பொருமி சீறி அழும் எனும் குணங்கள் காணும்.

8) தேரை தோடத்தில் - உடல் வற்றி உலர்ந்து போதல், கட்டிப்போட்டது போல நொந்து வறண்டு வெளிரும், கைகால் முடங்கி வரளும், வயிறு புடைத்துத் தொப்புள் மலரும், கண்சிறுத்தல், மலம் தீய்ந்து போதல், செவிகேளாமை, மார்புக்கூடு வெளித்தள்ளல், எவ்வளவு பால் உண்டாலும் உடல் தேராமை எனும் குணங்கள் காணும்.

        இந்த வகை தோடங்களில் உடல் கறுத்து, அதிகம் இளைத்து, வயிறு ஊதி, நீராகவும் - சீதமாகவும் பேதியாதல், மலவாய் வெளித்தள்ளல், சுரமுடன் கண் குழி விழுதல், பாலுண்ணாமை, கண்கள் மிகசொருகி மயங்குதல் எனும் குணங்கள் கண்டால் அசாத்தியம் ஆகும்.


மாந்தம் (மந்தம்) :
        மாந்தம் அல்லது மந்தம் என்பது குழந்தையின் உடல் மற்றும் உள்ளத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலையை குறிக்கும். இது குழந்தையின் முதல் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரையில் உண்டாகும். இந்த நோய் உண்டாக முக்கிய காரணம் தாயின் உணவு முறையில் உண்டாகும் மாற்றங்கள் மற்றும் தவறுகளேயாகும். இதன் காரணமாகக் குழந்தையின் வயிற்றில் அக்கினி மந்தம் அடைந்து செரிமானம் பாதிப்படையும். இது 21 வகைப்படும்.

மாந்தத்தின் பொது குணங்கள் :
கால் குளிர்தல், வயிறு கழிதல், அடிக்கடி அழுதல், கண்கள் சோர்தல் எனும் குணங்கள் காணும். இது சாத்தியம்.

மாந்தம் அதிகமானால் வாய்வெந்து புண்ணாதல், சுரம், இருமல், வயிறு கடுத்து இரத்தம் போதல், கழிச்சல், கையில் தங்காமல் அழுதல், அறிவழிதல், கைகால் வீங்குதல், இடுப்புக்கு கீழ் குளிர்தல் காணும். இது அசாத்தியம்.

மாந்தத்தின் வகைகள் :
  1. பால் மாந்தம்
  2. வாயு மாந்தம்
  3. கல் மாந்தம்
  4. தொங்கல் மாந்தம்
  5. நீர் மாந்தம்
  6. வலி மாந்தம்
  7. அக்கினி மாந்தம்
  8. புழு மாந்தம்
  9. உழத்து மாந்தம்
  10. கட்டு மாந்தம்
  11. அமர் மாந்தம்
  12. முத்தோட மாந்தம்
  13. சன்னி மாந்தம்
  14. செரியா மாந்தம்
  15. ஆனாக மாந்தம்
  16. விஷ மாந்தம்
  17. ஊது மாந்தம்
  18. பழ மாந்தம்
  19. போர் மாந்தம்
  20. நெய் மாந்தம்
  21. பேய் மாந்தம்

மாந்தம் உண்டாகக் காரணங்கள் :
        குழந்தைக்குப் பாலூட்டும் காலங்களில் தாய் சருகு ஊறிய நீர், எருமை பால் - தயிர் - மோர் - நெய்,  வாழை, மா, தேங்காய், இளநீர், கடலை, வெல்லம், துவரை, மொச்சை, புளியவிதை, பருப்பு உருண்டை, அதிரசம், வாயுப் பொருட்கள், சோறு, பழைய உணவுகள் இவற்றை அதிகமாக உண்பதாலும், விரால் - கெண்டை - உளுவை - வாளை மீன்கள், பாகல், கள், மாமிசம் இவற்றை உண்பதால் சுரம் அடித்தல் போன்றவற்றாலும், தாய்க்கு மலச்சிக்கல் மிகுந்து உடல் கனத்து இருக்கும்போதும் அவள் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தைக்கு மயிர்க்கூச்சமுடன், சுரமும், கழிச்சலும் உண்டாகும்.

        இதன் காரணமாகக் குழந்தைக்கு உடல் இளைத்தல், கறுத்தல் - வெளுத்தல், வயிறு ஊதல், வயிறு நொந்து கடுத்தல்,  உடல் வியர்த்து, வெப்பு நாற்றம் வீசுதல், கண்கள் சிவந்து - சுழன்று - சொருகி குழிவிழுந்து காணுதல், முகம் பலவாறு வெளுத்து மினுமினுத்தல், கையில் தங்காமல் அழுதல், விடாத சுரம், சோர்வு, மருண்டு பார்த்தல், கொட்டாவி, குரல் கம்மல், கைகால் குளிர்ந்து பின்னிக் கொள்ளுதல், மயக்கம், சிறுநீர் கடுத்து சிவந்து இறங்குதல், அதிக துர்நாற்றத்துடன் பலவித நிறங்களில் மலம் கழியும் எனும் குணங்கள் காணும்.


கணம் (கணை) :
        இது குழந்தை பாலும் குடித்து சோறுண்ணும் காலத்தில் குழந்தையின் மூன்றாம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டுவரையில் வரும். இந்நோயில் பலவித நோய்களின் குணங்கள் தொகுப்பாக இருப்பதால் இது கணம் என்று அறியப்பட்டது. இந்நோய் அதிக சூட்டினால் கபம் அதிகரிப்பதாலும், பலவித நீரை அருந்துவதாலும், மாந்த நோயினால் அதிகம் பாதித்த வேளையிலும், பசியுடன் இருக்கும் தாயின் பாலை அருந்துவதாலும் உண்டாகிறது. இது 18 வகைப்படும். சில நூல்களில் 24 வகை என்றும் உள்ளது.

கணை நோயின் வகைகள் :
  1. வாத கணம்
  2. பித்த கணம்
  3. தூங்கு கணம்
  4. சுர கணம்
  5. மூல கணம்
  6. இரத்த கணம்
  7. வரள் கணம்
  8. வெப்பு கணம்
  9. வாலசந்திர கணம்
  10. வீங்கு கணம்
  11. வெளுப்பு கணம்
  12. சத்தி கணம்
  13. மாந்த கணம்
  14. அத்திசுர கணம்
  15. மஞ்சள் கணம்
  16. நீல கணம்
  17. மகேந்திர கணம்
  18. அனல் கணம்

கணம் (கணை) நோயின் பொதுக் குணங்கள் :
        இந்நோயில் மூலச்சூடு அதிகரித்து வாயுவை அழுத்துவதால் பித்தம் தணிய வழியில்லாது உள்சுரமுடன் அனலாகக் காய்ந்து, உடல்வற்றி - மெலிந்து - சோர்ந்து - துவளும், வாயும் நாவும் உலர்ந்து - வறண்டு - வேக்காடு அடைந்து புண்ணாகும், வாய் நீரும் - கோழையும் நுரைத்து வடியும், தொண்டைக்கட்டி குரல் கம்மும், நுரையீரலில் கபம் அதிகரித்து புகைந்து இருமும், கண்ணின் நிறம் மாறிப் பஞ்சடைத்து - வெளுத்து - சுழன்று - வெறித்துப் பார்க்கும், மலம் தீய்ந்து வெளியாகும், சிறுநீர் கடுத்து இறங்கும், மார்புக்கூடு மேலெழும்பி காயும், வயிறு உப்பி - நொந்து - இரைந்து - வெதும்பிக் கழியும், கைகால் - முகம் கறுத்து சில சமையம் எரியும் - குளிரும் - வீங்கும், வயிறு - ஈரல் - கழுத்து - நெஞ்சு - தொண்டை - முகம் - மார்பு வீங்கும், மூக்கில் நீர் வடியும், வாய் நாறும், பலவிதமாக மலம் கழியும், மயக்கம், கிறுகிறுப்பு, தலை உச்சியில் குழி விழும் எனும் குணங்கள் காணும்.


அக்கரம் (வாய் - நாக்கு புண்) :
        இந்நோய் மூலத்தில் கிளம்பும் ஆவியானது மேலெழும்பி நாக்கு மற்றும் வாயில் வேக்காட்டை உண்டாக்கி, மாவு போல நீறுபூத்து, புண்ணாகி, பலவித துன்பங்களை உண்டாக்கும். இது 8 வகைப்படும். சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்படுகிறது. இந்த நோயுடன் நா முள், நாக்கு நாற்றம் எனும் நோய்களும் துணை நோய்களாகத் தோன்றும்.

அக்கரம் வகைகள் :
  1. சூலி அக்கரம்
  2. நீதி அக்கரம்
  3. சோதி அக்கரம்
  4. வீமி அக்கரம்
  5. குண்டி அக்கரம்
  6. கபாலி அக்கரம்
  7. குமரி அக்கரம்
  8. உள்அக்கரம்
  9. கறுத்த அக்கரம்
  10. சிவந்த அக்கரம்
  11. வெள்ளை அக்கரம்
  12. ஈரல் அக்கரம்
  13. வாய் அக்கரம்

அக்கரம் பொதுக் குணங்கள் :
        இந்நோயில் பொதுவாக நாக்கில் மாவு போன்ற படிந்து -  வெளுத்து - அடியாக வெடித்து - உலர்ந்து - வெந்து - புண்ணாகும், வயிறு பொருமல், கழிச்சல், நாவில் வெள்ளை நிற நீர் சுரக்கும், உடல் - கைகால் கறுத்து கடுக்கும், நாக்கு சிவந்து குத்தலுடன் உவர்மண்ணின் மணத்தை பெரும், உடல் கறுத்து - வெளுத்து இளைத்து நோகும், வாய் வறண்டு - வெந்து - கூசும் - கசக்கும் - நாற்றம் வீசும், மூன்று நாடிகளும் துடிக்கும், கணுக்கால் - இடுப்பு - கீல்கள் - விலா கடுக்கும்,  ஈரல் வேகும், நெஞ்சடைத்து எரிந்து கரிக்கும், ஆசனவாயில் குத்தும், தொண்டையில் ஒக்களித்து குரல் நெறியும், வயிறு நொந்து - இரைந்து - கழியும், உள்நாவு வரளும், உணவு செல்லாது, வாந்தி, தாகம், இருமல், குளிர், கடும்சுரம், தலைவலி, தூக்கம் காணும்.

        இதுவரை கூறிய நோய்கள் தவிர சுரம், சன்னி, கழிச்சல், வலிப்பு, சோகை, பாண்டு, காமாலை, வைசூரி (அம்மை) எனும் நோய்களும் குழந்தைகளுக்கு உண்டாகும். இவைகளைப் பற்றி முன்பே விளக்கப்பட்டுள்ள காரணத்தால் இங்கே தனியாக விளக்கவில்லை.

ரோக நிதானம் - பெண்களுக்கு உண்டாகும் நோய்கள்

மலட்டு ரோக நிதானம் :
        சுக்கில சுரோணிதங்களில் முக்குற்றத்தினாலும், பிறவிப் பாவத்தாலும் மலட்டுரோகம் உண்டாகும். அது ஆண்மலடு, பெண்மலடு என இருவகைப்படும்.

ஆண் மலடு :
ஆண்களின் விந்துவானது இனிப்பு இல்லாததும் சலத்தில் விட்டால் கரைந்து மிதப்பதும், உயிர்ப்பற்றதும், மூத்திரத்தில் நுரைகட்டுவதுமா யிருக்குமாயின் அதனால் கர்ப்பந்தரிக்கமாட்டாது.

பெண் மலடு :
மலட்டு தோஷங்கள் :
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளிப்படும் இரத்தத்தின் நிறத்தைக் கொண்டு அவர்களின் மலட்டு தோஷங்களின் சாத்திய அசாத்தியங்களை அறியலாம். அவையாவன,
  1. சிவந்தும், கறுத்தும் வெளிவந்தால் வாத தோஷம்
  2. மஞ்சள் அல்லது நீல நிறமாக வெளிவந்தால் பித்த தோஷம்
  3. சீழைப் போல் வெளுப்பாக வெளிவந்தால் ஐய தோஷம்
  4. பிரேத ரத்தத்தைப்போல் திரள் திரளாக வெளிவந்தால் ரத்தபித்த தோஷம்
  5. உதிரமானது கண்டு உடனே மறைந்தால் வாத பித்த தோஷம்
  6. மல மூத்திர நிறமாக வந்தால் சந்நிபாத தோஷம்
இவற்றுள் வாத பித்த கப தோஷங்கள் சாத்தியம். தொந்த தோஷங்கள் கஷ்ட சாத்தியம். சந்நிபாத தோஷம் அசாத்தியமாம்.


யோனி தோஷங்கள் :
        கணவன் புணரும்போது அந்தப் பெண்ணுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து அவளுக்கு இருக்கும் யோனி தோஷங்களை அறியலாம். அவையாவன,

  1. தலைநோய் கண்டால் கருக்குழியில் பாரம் அல்லது கிருமி இருக்கும்
  2. உடல் முழுதும் வலி கண்டால் கருக்குழியில் வாயு இருக்கும்
  3. நெஞ்சுவலி கண்டால் யோனி சுருங்கி தசை வளர்ந்திருக்கும்
  4. முதுகில் வலி கண்டால் யோனியில் கிருமி நிறைந்திருக்கும்
  5. கண்டசதை வலி கண்டால் யோனியில் ரத்தம் கட்டி இருக்கும்
  6. ஏப்பம் கண்டால் யோனி மதத்து கொழுப்படைந்து இருக்கும்
  7. விந்து சேராமல் நஷ்டப்படுமாகில் பேயினாலும், பயத்தினாலும் இருக்கும்

மலட்டு நோய்கள் :
  1. ஆதிமலடு - வயிற்றில் மூன்று மடிப்பு விழுந்து இடுப்பு பருத்து காணும்
  2. காக மலடு - இரண்டு பிள்ளைக்குப் பிறகு குழந்தை இல்லாதிருப்பது.
  3. கதலிமலடு - ஒரு பிள்ளையைப் பெற்ற பிறகு குழந்தை இல்லாதிருப்பது.
  4. கருப்ப மலடு - வயிற்றிலே பிள்ளை செத்து செத்து விழுவது.

பெரும்பாடு (Menorrhagia) நோய் நிதானம் :
        பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாக வெளியாதல் பெரும்பாடு எனப்படும். இது 4 வகைப்படும்.

பெரும்பாடு வரக் காரணங்கள் :
        அதிக உஷ்ண வீரியப் பொருள்களை உண்ணுதல், அதிக உணவு, அசீரணம், கருப்பை அழற்சி, அதிக போகம், மலை முதலியவை ஏறுதல், அதிக நடை, அதிக துக்கம், தடி முதலியவைகளால் அடிபடல், பகல் உறக்கம் இவற்றால் பெரும்பாடு நோய் ஏற்படும்.

பெரும்பாட்டின் பொதுக் குணங்கள் :
        பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வெளியாகும் உதிரமானது இயற்கைக்கு மாறாக அதிகமாகவும், நிறம் மாறியும் காணுதல், நீடித்து இருத்தல், வயிற்றில் வலி, உடல் பலவீனம் முதலிய குணங்களைப் பெற்றிருத்தால், மயக்கம், தாகம், மதம், அதிக கோபம், உணவில் வெறுப்பு, உடல் வெளிரல், நமைச்சல், வாந்தி எனும் இக்குணங்கள் காணும்.

1. வாதப் பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது அற்பமாயும் சிவந்து, நுரையுடன், புலால் கழுவிய நீரைப் போல் சிறிது சிறிதாக வெளியாகும்.

2. பித்தப் பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது மஞ்சள், கருப்பு, சிவப்பு நிறங்களாகவும், அதி உஷ்ணமாகவும், அதிவேகமாக இரத்தம் வெளியாகும்.

3. ஐய பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது விஷத்தைப் போலும், சீதத்தைப் போலும், வெண்ணிறத்திலும், சாதம் வடித்த நீர் போல் உதிரம் வெளியாகும்.

4. முக்குற்ற பெரும்பாடு :
இதில் வெளியாகும் உதிரமானது தேன், நெய், அரிதாரம் இவைகளின் நிறத்திலும், கொழுப்பைப் போலும், பொறுக்க இயலாத நாற்றத்துடனும், இரத்தம் வெளியாகும்.

ரோக நிதானம் - சுரத்தால் பிறக்கும் துணை நோய்கள்

        சுர நோயின் கேட்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதாகச் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுவதிலிருந்து சுரமானது பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழிவகை செய்து நமக்குக் கேடு விளைவிக்கும் என்று உணர வகையாகிறது. இதைக் கீழ்கண்ட பாடல் உணர்த்தும்.


சுரமதே கனலதாகும் சுரமதே சீதமாகும்
சுரமதே தோடமாகும் சுரமதே சோகையாகும்
சுரமதே மேகமாகும் சுரமதே கபமுமாகும்
சுரமதே (அதி)சாரமாகும் சுரமதே தாகமாமே.

சுரமதே வறட்சியாகும் சுரமதே ரத்தமாகும்
சுரமதே சீழுமாகும் சுரமதே மஜ்ஜையாகும்
சுரமதே கணையதாகும் சுரமதே இருமலாகும்
சுரமதே க்ஷயமதாகும் சுரமதே பொருமலாமே.

சுரமதே சூலையாகும் சுரமதே சொறியதாகும்
சுரமதே விரணமாகும் சுரமதே பித்தமாகும்
சுரமதே வாதமாகும் சுரமதே வாய்வுமாகும்
சுரமதே ஈளையாகும் சுரமதே இழுப்புமாகும்.


சுரமதே கனலதாகும் - சுரத்தின் கேடால் உடல் வலிமை குறைந்து, பித்தம் மிகுந்து, இரத்தம் குறைந்து, நீர்க்கடுப்பு, எலும்புருக்கி எனும் வெப்ப நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே சீதமாகும் - சுரத்தின் கேடால் பித்தவாதம் அல்லது ஐயம் அதிகரித்து, வெப்பம் குறைந்து, குரல் கம்மல், கீல்களில் வீக்கம் முதலிய சீதளம் தொடர்பான நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே தோடமாகும் - சுரம் இருக்கும் போதும், சுரம் விட்ட போதும் பத்தியங்கள் தவறுவதால் உடலின் ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது அனைத்துமோ பாதித்துச் சந்நிபாதம் காணும்.

சுரமதே சோகையாகும் - சுரத்தின் கேடால் பித்தம் அதிகரித்து இரத்தம் நீர்த்து வற்றிப்போகும். இதனால் பாண்டு, சோகை, காமாலை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்புகள் உண்டாக்கும்.

சுரமதே மேகமாகும் - சுரத்தின் கேடாலும், சுரம் கொண்ட காலத்தில் அதிக உணவு அல்லது மிகக் குறைந்த உணவு, அளவுக்கு மீறிய உழைப்பு, தகாத நடத்தை போன்ற காரணங்களால் அடிவயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, குறியின் நாளம் இவைகளில் வீக்கமும், புண்ணும் உண்டாகி, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், வெள்ளை வெட்டை, பிரமேகம், பிரமியம் எனும் நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே கபமுமாகும் - சுரத்தின் கேடால் இரத்தம் குறைந்து, நுரையீரல் வெப்பமடைந்து, அதன் வலிமையும், செயலும் கெட்டு, கபம் மிகுந்து இருமல், ஈளை, இளைப்பு போன்ற நோய்கள் உண்டாகி உடலை வற்றச் செய்யும்.

சுரமதே (அதி)சாரமாகும் -  நாட்பட்ட சுரத்தின் கேடால் உடல் வலிமை கெட்டு, உணவு செரிக்கும் சக்தி கெட்டு, மூலத்தில் வாய்வு தங்கி, பெருங்கழிச்சல் எனும் அதிசாரம் காணும்.

சுரமதே தாகமாகும் - சுரத்தின் கேடால் உடல் வலிமை குன்றி நாவு, கண்டம் (கழுத்து), தாடை, நரம்பு இவைகளில் வெப்பம் உண்டாகி நீர் வேட்கையை உண்டாக்கும்.

சுரமதே வறட்சியாகும் - சுரத்தின் வேகம் தணியாமல் அது உடலில் பரவி, உடலை வாட்டி உலர்த்தி, இரத்தம் குறைந்து, சோபை, எலும்புருக்கி எனும் நோய்கள் உண்டாக்கும்.

சுரமதே இரத்த(பித்த)மாகும் - சுரத்தின் கேடால் இரத்த பித்தம், இரத்த காசம், இளைப்பு எனும் நோய்கள் உண்டாகும்.

சுரமதே சீழுமாகும் - சுரத்தின் கேடால் ஆம தோடம் உண்டாகி சீழுடன் கூடிய கட்டிகள், பிளவைகள் இவற்றை உண்டாக்கும்.

சுரமதே மஜ்ஜையாகும் - சுரத்தின் கேடால் எலும்பிலும், மூளையிலும் வெப்பம் அதிகரித்து கொழுப்பு தாதுவைக் குறைக்கும். உடல் வற்றும்.

சுரமதே கணையதாகும் - சுரத்தின் கேடால் குழந்தைகளுக்குக் கணை எனும் நோய் காணும்.

சுரமதே இருமலாகும் - சுரத்தின் கேடாலும், மருந்தின் வேகத்தாலும் இருமல் நோய் உண்டாகும்.

சுரமதே க்ஷயமதாகும் - சுரத்தின் வேகத்தால் குருதியைக் கெடுத்து உடலை இளைக்கச் செய்து இளைப்பு நோயை உண்டாக்கும்.

சுரமதே பொருமலாகும் - சுரத்தின் கேடால் செரிமான திறன் குறைந்து, வாத, பித்தம் கேடடைந்து, வயிற்றில் வாயு மிகுந்து, வயிறு பொருமலை உண்டாக்கும்.

சுரமதே சூலையாகும் - சுரத்தின் கேடால் குருதி கெட்டு எலும்புகளின் சந்திகளில் (கீல்கள்) நீர் தங்கி மூட்டுகளில் அதிக வலியை உண்டாக்கும். இது சூலைநோய் எனப்படும்.

சுரமதே சொறியதாகும் - சுரத்தின் கேடால் செரிமானம் கெட்டு, அது குருதியைக் கெடுத்து, வலிமை குறைந்து, தோல் வெப்பமடைந்து சொறி நோயை உண்டாக்கும்.

சுரமதே விரணமாகும் - விஷக் கடிகளால் உண்டாகும் சுரம் குணமடைந்த பிறகும் அல்லது  மற்றும் நாட்பட்ட சுரம் சொறி, சிறங்கு, கொப்புளம், புண், புரைகள் இவற்றை உண்டாக்கும்.

சுரமதே பித்தமாகும் - சுரத்தின் கேடால் அறிவு கலங்கி பைத்தியம் என்ற நோயை உண்டாக்கும்.

சுரமதே வாதமாகும், சுரமதே வாய்வதாகும் - சுரத்திற்கு தரும் மருந்துகளின் வேகம் அதிகமாக இருக்கும்போது மலமும், சலமும் கட்டுப்பட்டு, வாத நோயையும், குடலில் வாயுவை அதிகரிக்கவும் செய்யும்.

சுரமதே ஈளையாகும் - சிலவகை சுரங்களில் வாதத்தின் வலிமை குறைந்து, நுரையீரலில் கபம் அதிகரித்து, மூச்சு விட இயலாதவாறு ஈளை நோய் உண்டாகும்.

சுரமதே இழுப்புமாகும் - சுரத்தின் கேடால் கபம் அதிகரித்து, மலமும் ஒரே நேரத்தில் தடைபடும்போது இழுப்பு எனும் இரைப்பு நோய் உண்டாக்கும்.

மேலும் சுரநோயினால் முக்குற்ற நோய் என்று அழைக்கப்படும் சந்நிபாதம் அல்லது சன்னி என்ற நோயும் உண்டாகும்.

ரோக நிதானம் - சுரம்

        உடலின் இயற்கைச்சூடு அளவுக்கு மிஞ்சி உடல் முழுவதுமோ அல்லது ஒருசில பாகங்களிலோ அதிக வெப்பமாக இருத்தல், கண் எரிச்சல், வாய்க் குமட்டல், வாந்தி, தலைப்பாரம், தலைவலி, உடல்வலி எனும் குணங்களைக் கொண்டிருக்கும். இது சுரம் 64-வகைப்படும் எனவும் இன்னும் சில நூல்களில் 276 வகைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுரம் வரக் காரணங்கள் :
        இரைப்பையில் குளிர்ச்சி அதிகமாகி அதனால் கபம் பெருகி வயிற்றில் இருக்கும் அனல் அதிகரித்து, அது நரம்பின் வழியாக உடல் முழுவதும் பரவி இந்நோய் உண்டாகிறது. மேலும் உண்ணும் உணவின் அளவு, காலம், பக்குவம் முதலியவற்றின் பேதத்தாலும், நீரின் குற்றத்தாலும், பருவகால வேறுபாடாலும், மழையில் நனைதல், வெய்யிலில் காய்தல், பகலில் தூங்குதல், இரவில் கண் விழித்திருத்தல், பதினான்கு வேகங்களை அடக்கல், மந்தம், மலக்கட்டு, வாத, பித்த கபத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளை உண்ணுதல், அதிக வெப்பம், அதிக குளிர்ச்சி, அதிக புணர்ச்சி, அதிகமாக எண்ணெய் நீராடல், எண்ணெய் நீராடிய பிறகு புணர்ச்சி, அடிபடல், விஷம் கலந்த உணவு, சீதோஷ்ண நிலை மாற்றம் முதலிய காரணங்களாலும் உண்டாகிறது.

சுரத்தின் பொதுக் குணங்கள் :
        உடல் வலி, நாவறட்சி, கொட்டாவி, உணவில் வெறுப்பு, அருவருப்பு, மயக்கம், வாய் கசத்தல், பிதற்றல், கூசுதல், கிறுகிறுப்பு, உடல் குத்தல், கடுத்தல், குடைச்சல், ஒக்காளம், வாந்தி, குமட்டல், சளிக்கட்டு, பேதி அல்லது மலக்கட்டு, மூக்கில் நீர் வடிதல், சிறுநீர் மஞ்சள் அல்லது சிவந்த நிறத்தில் இழிதல், குரல் கம்மல், பசியின்மை அல்லது பொய்ப்பசி, மயிர்க் கூச்செறிதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

சுரத்தின் பத்து அவஸ்தை :
        அற்ப ஞாபகம், இறந்தவர்களை கண்ணில் கண்டு பேசுதல், போலிருத்தல், சித்தபிரமை, மேல்மூச்சு, விழி விழித்தபடியே இருத்தல், குரல் மாறல், உடல் முழுவதும் அதிக எரிச்சல், தன் கையினால் முகத்தைத் தடவிக் கொள்ளுதல், சரீர முழுவதுஞ் சீதளவியர்வை காணல், தேகத்தை விட்டு ஆவி நீக்குதல்.

        இப்பத்து அவஸ்தைக்குள் முதல் மூன்று அவஸ்தை வரையிலும் வைத்தியம் செய்யலாமென்று சில நூல்களிலும், ஒன்பதாவது அவஸ்தை வரையிலும் அதாவது பிராணன் நீங்குகிற வரையிலும் வைத்தியம் செய்யலாமென்று சில நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

அசாத்தியசுர இலக்கணம் :
        சுரநோயாளிகளுக்கு உடலில் நடுக்கலுடன் மிக்க நோய், மேல்மூச்சு, மூர்ச்சை, அடிக்கடி களைப்பு, இளைப்பு, மார்பு நோய், கண்ணில் நோயுடன் குத்தல், முகம் குங்குமம் போல் சிவத்தல், கழுத்து குறுகுதல் அல்லது நீளுதல், இரவில் எரிச்சல், பகலில் குளிர்ச்சி, நா கறுத்தல் அல்லது சிவத்தல், ஆசனம் வெளிப்படல், ஈனத்தொளி, சிலேஷ்ம நாடி அதி வேகமாய் நடத்தல், சுவாசம் சில்லிடல், மார்பு, உந்தி, மூக்கு உள்ளங்கைகள் ஆகிய இவ்விடங்களில் குளிர்ச்சி, சிரசு மாத்திரம் அக்கினி போல் சுடல், தன்படுக்கையை விட்டு ஓடுதல், அடிக்கடி முகத்தை தன் கையால் தடவுதல், தன் படுக்கைய அடிக்கடி தட்டுதல் முதலிய சந்நிபாத அகோர குணங்கள் இருக்குமானால் அசாத்தியமாம்.

சாத்திய சுர இலக்கணம் :
        சுரரோகிகட்கு, கண்பார்வை, தேகம், பஞ்சேந்திரியங்கள், இவைகள் சுகபாகமாயிருத்தல் சாந்தி, இளைப்பின்மை, உள்ளங்கை, உள்ளங்கால்கள் சூடாகயிருத்தல், எழுந்தாலும், உட்கார்ந்தாலும் உடல் கனத்தலின்றி இயற்கையாக இருத்தல் என்னுங் குணங்கள் இருக்குமானால் சாத்திய சுரமென்றரிக.

விட்ட சுர இலக்கணம் :
        உடல் கனமின்றி லேசாகவும் இயற்கையாக இருத்தல், பஞ்சேந்திரியங்களின் சுபாவ இயக்கம், மனசாந்தி, சிரசில் நமைச்சல், தும்மல், வியர்வை, பசி என்னும் குணங்கள் இருக்குமானால் சுரரோகம் விட்டதென்றரிக.

சப்த தோஷ பேதம் :
        சுரம், பிறந்த ஒன்பது நாள் வரையிலும் தருண சுரமெனப்படும். அந்த சமயத்தில், பரிமள போஜனத்தினால் குளிர்ந்த சலம், புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, நெய், நல்லெண்ணெய், வெல்லம், சயித்திய பண்டம், புது வஸ்திரம், சிவந்த வஸ்திரம், பரமள திரவியங்கள், காற்று வீடு, தாம்பூலம், சீதள உபச்சாரம், சந்தனம், மாதர்களை விருப்பத்துடன் பார்த்தல், சையோகம், புத்தகம் வாசித்தல், அதிதூரநடை, கோபம், அழுதல், தேகம் என்பவைகள் அணுகில் வாதாதிகள் நாபியைப்பற்றி, குடிலப்படுத்தி முகம், நாசி, நா என்னும் இவைகளை வெறிந்த பார்வையை உண்டாக்க தோஷம் பிரபலப்படும். அவை எழு வகைப்படும்.

1. அபத்திய தோஷம் :
சோம்பல், மூர்ச்சை, பிரமை, தாகம், அதிக பிரலாபம், மார்பு நோய் எனும் குணங்கள் காணும்.

2. சங்க தோஷம் :
சர்வாங்க நோய், நடுக்கல், மார்பெரிச்சல், பொய் பேசல், அடிக்கடி தன்படுக்கையை விட்டு எழுந்திருத்தல், பிரமை, உள்ளங்கை குளிர்ச்சி எனும் குணங்கள் காணும்.

3. விஷம தோஷம் :
சுரம், எர்ச்சல், அதிதாகம், குடித்தலோடு தீவிரமாக நடக்குதல், வயிறெரிச்சல், வியர்வை அழலை எனும் குணங்கள் காணும்.

4.விஷம சீத தோஷம் :
ஒரு தினத்திலேயே இரண்டு-மூன்று-நாலு தரங்கள் குளிரோடு சுரத்தை உண்டாக்குவதன்றி, தாகம், புறண்டல், தலைநோய், நாக்கு தடித்து முட்போலிருத்தல், பிரலாபம், சித்தபிரமை, புரளல் எனும் குணங்கள் காணும்.

5. பீத ஜிம்மக தோஷம் :
நாக்கு மஞ்சள் நிறமாக வெடித்து ஈரமில்லாமல் முட்போலிருத்தல், சுரம், பிரமை, வியர்வை, மூர்ச்சை, தொண்டை கம்மல், வெருட்சி, நடுக்கல் எனும் குணங்கள் காணும்.

6. ரக்த ஜிம்மக தோஷம் :
நாக்கு சிவந்து முட்போன்று கொஞ்சம் நீண்டிருக்குதல், சுரம், தாகம், எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

7. கிருஷ்ண ஜிம்மக தோஷம் :
நாக்குக் கறுத்து வறண்டு முட்போலிருத்தல், அடிக்கடி எழுந்திருத்தல், சித்தபிரமை, வயிறுப்புசம், தினவு, வியர்வை, தாகம், சோபம், அழலை, துடிப்பு, கை கால் அசதி, சரீரம் கறுத்தல் எனும் குணங்கள் காணும்.


சுர வகை :
சுரமானது வாதசுரம், பித்தசுரம், கபசுரம், வாத பித்த சுரம், வாத கப சுரம், பித்த கப சுரம், சந்நிபாத சுரம் என ஏழு வகைப்படும் என்றும், தோஷங்களின் செயலின்றி அடிபடுதல் முதலிய புற காரணங்களினால் ஏற்படும் ஆகந்துசுரம் என்ற ஓர் வகையையும் இத்துடன் சேர்த்து சுரம் எண் வகைப்படும் எனச் சிலரும் கூறுவதுண்டு.

1) வாத சுரம் :
உறுப்புகளில் குத்தல், கண்களிலிருந்து சலம் வடி தல், மார்பு துடித்தல், உடலில் வெப்பம், சில சமயம் குளிர், மலச்சிக்கல், மூத்திரம் உஷ்ணமாய் வறண்டு இருத்தல், கீல்களில் வலி, வயிற்றுப்புசம், முகம் மினுமினுத்துக் காணல், வாந்தி, இடுப்பில், வலிவின்மை, கைகால் அசதி, வாயினித்தல், புளிப்புச் சுவையுள்ளப் பொருட்களில் இச்சை முதலிய குணங்கள் உண்டாகும்.

2) பித்த சுரம் :
பிதற்றல், மேல்மூச்சு, தலைநோய், அதிக தாகம், வயிற்றுவலி, கோழை, அருசி, வாய்கசப்பு, தேகம் மிகச்சூடாயிருத்தல், மூத்திறம் செந்நிறமாய் கடுத்துவிழல், மயக்கம், நடுக்கம், கண்சிவந்து காணல், உடலில் எரிச்சல், வாந்தி முதலிய குணங்களை உண்டக்கும்.

3) சிலேத்தும சுரம் :
கண்களில் நீர் வடிதல், கண்டத்தில் கோழை கட்டல், பெருமூச்சு, விக்கல், இருமல், தாகம், அரோசகம், நடுக்கல், வாயில் உப்புச்சுவைத் தோன்றல், மூத்திரம் அதிகமாய் போதல், தலைநோய், இரைப்பு, சந்திகளில் நோய், உணர்வு விருப்பமின்மை, முகம், நா, உடல் வெளுத்துக் காணல், அற்ப வியர்வை முதலிய உண்டாகும்.

4) வாத பித்த சுரம் :
கண், மார்பு, கண்டம், இவைகளில், எரிச்சல், தலைவலி, வாந்தி, பெருமூச்சு, நாகம், நாவளரல், அருசி, நீலம் சாம்பல் நிறமாயிருத்தல், வயிற்றுப் பொருமல் உடல் உளைச்சல் முதலிய குணங்கள் உண்டாகும்.

5) வாத சிலேத்தும சுரம் :
உடலில் பிசுபிசுப்பு, வாயில் உப்புச் சுவை, தலைவலி, தேகம் முழுவதும் குத்தல், குடைச்சல், கண்களில் நீர் வடிதல், வாந்தி, நாசியில் சலம் வடிதல், பெருமூச்சு, அதிதாகம், தூக்கமின்மை, பசியின்மை, மூத்திரம் நுரையுடன் வீழல், இருமல் கீரல்களில் வேதனை, சயித்தியம், முதலிய குணங்கள் உண்டாகும்.

6) பித்த சிலேத்தும சுரம் :
உடலானது ஸ்தம்பித்து மரத்தல், மார்பிலும், பிடரியிலும் வலி, தலை பாரம், அற்ப்ப இருமல், நடுக்கல், வாய் கசப்பாயும், உப்புச் சுவையாயும், அருசியும் இருத்தல், பித்தம் கால்களில் எரிச்சல், கண்டத்தில் கோழை கட்டுதல், தூக்கமின்மை, வாந்தி, மூத்திரம் வெண்மையாகவும், சிவப்பாகவும் முதலிய குணங்கள் உண்டாகும்.

7) ஆகந்துக சுரம் :
நரம் உண்ணும் அன்னபானாதிகளாலன்றி வேறு புறகாரணங்களினால் உண்டாகும் சுரங்களுக்குப் பொதுவாக ஆகந்துக சுரமெனப் பெயர். இது நான்கு வகைப்படும். அவையாவன,

8) அபிகாத சுரம் :
காயங்களினாலும் இரணங்களினாலும் நெருப்பினிடத்தே நடத்தும் தொழில்களினாலும், அதிக நடை அடிக உழைப்பு இவைகளினாலும் உண்டாகும்.

9) சாபச்சுரம் :
இது பெரியவர்களின் சாபத்தினால் உண்டாவதால் அதிக உக்கிரமாகவும் சந்நிபாத சுரகுணங்களை உண்டாக்கும். தேவ ஆராதனை, பூசை, அன்னதானம், பெரியவர்களின் ஆசி முதலியவைகளால் நீங்கும்.

10) அபிசார சுரம் :
இது உச்சாடண மாரண ஹோமங்களினால் ஆச்சரியமான கொப்புளங்கள் தேக முழுதும் தோணும். சந்நிபாதசுர குணங்களிருக்கும்.

11) அபிஷங்க சுரம் :
இது சேர்க்கையால் வரும் சுரம். இது ஏழு வகைப்படும். அவை,

12) பூதாவேச சுரம் :
அதிக சுரம், காரணமின்றி நகைத்தல், அழுதல், கண்ணை  உருட்டி விழித்தல், தேகம் கறுத்தல், பிரலாபம், அதிதிண்டி, சகல பதார்த்தங்கள் மீது விருப்பம், ஆடல் பாடல், உரோமச் சிலிர்ப்பு, நித்திரை, எரிச்சல், நளிர், தலைநோய், கண் சிவத்தல், வாந்தி, விக்கல், சுவாசம், பலவீனம், ஏப்பம், கொட்டாவி, பிரமை, மன வேதனை, தொண்டை முதல் பாதம் வரையிலும் வியர்வை, சர்வாங்க சீதளம், ஈனத் தொனி, திரிதோஷங்களின் விருத்தி எனும் குணங்கள் காணும்.

13) அவுஷத கந்தக சுரம் :
இரசம், கந்தகம், பாஷாணம், சேங்கொட்டை முதலிய மருந்துகளின் புகை அல்லது நஞ்சினால் சுரம் உண்டாகி மூர்ச்சை, தலைநோய், தேகவீக்கம், தும்மல், அதிக தாகம் எனும் குணங்கள்  காணும்.

14) விஷசுரம் :
இது விடங்களினால் ஏற்பட்டு மூர்ச்சை, பேதி, எரிச்சல், முகம் கறுத்தல், மார்புநோய், அதிகசுரம் திரிதோஷக் கோபம் எனும் குணங்கள் காணும்.

15) கோப சுரம் :
இது தலைநோய், உடம்பு பதைத்தல், அதிக சுரம், பித்த கோபம், எனும் குணங்கள் காணும்.

16) பய சுரம் :
சுரம், அடிக்கடி பயப்படல், புலம்பல், வியர்வை, எரிச்சல், கண்கள் சிவத்தல், பலயீனம், சிரசிலும், கண்ணிலும் நோய், நித்திரை பங்கம், தலை சுழலல், கவாசம், சூலை, உரோமச் சிலிர்ப்பு, சயித்தியம், மார்பிலும், இடுப்பிலும், தடித்தல், பற்கடித்தல் எனும் குணங்கள் காணும்.

17) துக்க சுரம் :
வாயில் வந்தபடி யெல்லாம் பிதற்றல், அதிக சுரம், அழுதல் எனும் குணங்கள் காணும்.

18) காம சுரம் :
மிகு சுரம், புத்தி, வெட்கம், நித்திரைகளின் கெடுதி, மோகம், ஆண்குறி, தொப்புளின் கீழ் ஸ்தானம், புருவம் நெற்றி இவைகளில் எரிச்சல், சையோத்தில் இச்சை, புன் சிரிப்பு, அதிகதாகம் கண்சிவந்தல், என்னும் குணங்களையுடையது.

இந்த ஏழுகைச் சுரமும் சரீரசுரம், மானுளிகசுரம், என இருவகையில் அடங்கும். மற்றும் சுரங்களை சரீராதி சுர பேதங்கள் என 12 வகையாகக் கூறப்பட்டுள்ளன.

19) சரீராதி சுர பேதங்கள் :
சரீரத்தில் தபித்தலை உண்டாக்கி சுரம் வரும்.

20) சரீர சுரம் :
முதலில் மனதை தப்பிக்கச் செய்து பிறகு சுரம் காணும்.

21) சௌமிய சுரம் :
இது முதலில் காந்தமாகப் பிறகு சுரத்தின் குறி குணங்களை யெல்லாம் உண்டாக்கும்.

22) தீஷக சுரம் :
இது ஆரம்பத்திலேயே அதிக உக்கிரமாக கண்டு நாளடைவில் காய்ச்சலுக்கு உண்டான குணங்களை பெற்றிருக்கும்.

23) உள்சுரம் :
இது முதலில் வயிற்றில் அதிக சங்கடம், மல பந்தம், முதலிய உள் வேதனைகளை உண்டாக்கி பிறகு சுரக் குணங்களை உண்டாக்கும்.

24) வெளிச்சுரம் :
சப்த தாதுக்களை பாதிக்காமல் சர்மத்தின் மேல் திடீரெனக் கண்டு சிலநேரத்தில் தோஷமென்றும் இல்லாமல் போய் விடும்.

25) பிராகிருத சுரம் :
ஆவணி புரட்டாசி மாதங்களில் பித்தசுரம் போலும், சித்திரை, வைகாசி மாதங்களில் கபசுரம் போலும் காணும்.

26) வைகிருத சுரம் :
மாசி, பங்குனி மாதங்களில் வாதசுரம் போலும் ஆனி ஆடி மாதங்களில் பித்தசுரம் போலும், மார்கழி, தை மாதத்தில் சிலேத்தும சுரம் போலும் காணும்.

27) சாத்தியச் சுரம் :
மேற்கூறிய பிராகிருத சுரங்கள், வைகிருத சுரங்கள் உண்டான போது அவைகளின் குணங்களும், மிகுதாகமும், மிகுநித்திரையும், சந்நிபாத சுர லக்ஷணங்களும் இல்லாமல் இருக்கும்..

28) அசாத்திய சுரம் :
சப்த தாதுக்களில் பிரவேசித்து நெடுநாளாக நீங்காமல் சந்நிபாத சுர லக்ஷண முழுதும் உண்டாக்கிய சுரமும், காலை மாலை கடுமையுடன் உண்டாக்கிய சுரமும், தேக பலத்தையும் மாமிசத்தையும் குறைத்து கோழை விழும்படி உண்டாக்கிய சுரமும் அசாத்திய சுரமாம்.

29) சாமச்சுரம் :
சுரங்களுக்கிருக்கிற இரைப்பு, மூர்ச்சை, பிரமை, ஒக்காளம், தாகம், பேதி, கொட்டாவி, விக்கல், சரீர வேதனை, மலபந்தம் என்னும் இப் பத்து அவஸ்தைகளுடன் இளைப்பு, அடிக்கடி நீரிறங்கல், மலபந்தம், அக்கினி மந்தம், அசீரண பேதி, அதிக சீதம் விழுதல் வயிற்று நோய், நடுக்கம், தாகம், கைகால் குளிர்ச்சி, கபாதிக்கம், நித்திரை பங்கம், கண்களில் ஜலம் வடிதல் எனும் குணங்கள் காணும்.

30) நிராம சுரம் :
ஆமாசயக் கெடுதியால் புசிக்கும் அன்னம் சீரணியாமல் இந்நோய் ஏற்பட்டு சுவாசம், இருமல், அசீரணம், வாத கபங்கள் கூடிய சுரம், துர்ப்பலம், சிரோபாரம், தேகஞ் சுருங்கல், கண்டத்திலும் நெற்றியிலும் வியர்வை, கண் சிவத்தல், நாவறளல் எனும் குணங்கள் காணும்.

31) வாதாதி சுரம் :
தோஷமானது சப்த தாதுக்களைப் பற்றி உண்டாகி சுரம் விடுகிற தருணத்தில் மீண்டும் முன்போல் சுரக்குணங்கள் எல்லாம் பிறக்கும். இதற்கு முக்கியமான சுரம் என்று பெயர்.

32) தெய்வ பிரகோப சுரம் :
தெய்வங்களின் குற்றத்தினால் உண்டாகி சிரோபாரம், வியர்வை, சர்வாங்க சீதளம், ஏப்பம், விக்கல், சடத்துவம், சூலை எனும் குணங்கள் காணும்.

33) காந்தருவ சுரம் :
சர்வாங்கமும், சுருங்கல், கண்களில் மஞ்சள் நிறத்துடன் சலம் வடிதல், பலவீனம், அற்பசூலை, கீல்கள் அசையக் கூடாமை, பிரமை, கோபம், பசியில்லாமை, பெருமூச்சி, சயித்தியம், அடிக்கடி மூர்ச்சை, சர்வாங்க வீக்கம், கனவில் விந்து நஷ்டம், ஏப்பம், விக்கல், அடிக்கடி நீரிறங்கல் எனும் குணங்கள் காணும்.

34) தாந்திரிக சுரம் :
தேகம் சுழன்று வருவது போன்ற உணர்ச்சியுடன் வலி, பலவீனம், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை, நாடி மெதுவாக அல்லது அதிவேகமாக நடத்தல் எனும் குணங்கள் காணும்.

35) மூர்ச்சை சுரம் :
மூர்ச்சை, பலவீனம், தலைபுரட்டல், மிகுவார்த்தை, ஒருவேளை பேசாமல் இருத்தல், வாதாதிக்கம், கனத்தொனி, வாயிற் கசப்பு, கைகால் குளிர்ச்சி, இரத்தமூத்திரம் எனும் குணங்கள் காணும்.

36) பிரலாப சுரம் :
பிரலாபம், சர்வாங்க வெளிறல், வாழைத் தண்டைப் போல் சீதளம், நகங்களில் உதிரமில்லாமை, நாக்கு மஞ்சள் நிறத்துடன் முட்போலிருத்தல், நெஞ்சுநோய், நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை எனும் குணங்கள் காணும்.

37) சீத சுரம் :
கபாதிக்கம், வாந்தி, விக்கல், வியர்வை, பலவீனம், இருமல், இரைப்பு, மார்புநோய், தலைசுற்றல், நாடி உள்ளடங்கல், நாக்கு சிவப்போடு முட்போல் இருத்தல் எனும் குணங்கள் காணும்.

38) வியர்வை சுரம் :
மிகுவியர்வை, சுரக்குறிகள், தலையிலும் காதிலும் நோய், சோர்வு, கைகால்களில் மஞ்சள் நிறம், தலையில் சதா வேதனை, நாடியானது சூட்சுமத்திலும் வேகமான நடை, ஒரு வேளை தாமத நடை எனும் குணங்கள் காணும்.

39) கிருமிச்சுரம் :
வயிற்றில் மிகுசூலை, உப்பிசம், ஏப்பம், வாந்தி, சுரக்குறிகள், வாயினாலும் அபானத்தினாலும் அளவற்ற பூச்சிகள் விழுதல், அக்கினிமந்தம், நித்திரை பங்கம், மனோதுக்கம்எனும் குணங்கள் காணும்.

40) அரித்திர சுரம் :
சர்வாங்கத்திலும் மஞ்சள் நிறத்துடன் தடிப்பு, முகத்தில் எண்ணெய் தடவினது போல் பிசிபிசிப்பு, கீல்களில் வீக்கம், நெஞ்சு உலர்தல், சந்நிபாத சுரக் குறிகள் எனும் குணங்கள் காணும்.

41) உதய சுரம் :
சுரமானது உதயகாலத்தில் உண்டாவதுடன் கருக்கல்லில் இருத்தல், சந்நிபாதசுர குணங்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

42) மத்தியான சுரம் :
சுரமானது மத்தியானத்தில் உண்டாகி பித்த சுர குணங்களுடன் தினவு, அதிகவார்த்தை, அதிமூத்திரம், நடுக்கல், அதிசீதளம் எனும் குணங்கள் காணும்.

43) மாலை  சுரம் :
சுரமானது மாலை காலத்தில் பிறந்து சந்நிபாத சுர குணங்களை உடையது.

44) நிசி சுரம் :
சுரமானது நடு இரவில் உண்டாகி சகல சுரங்களின் குணங்களை உடையது.

45) சோஷை சுரம் :
சோஷை, தபித்தல், மூர்ச்சை, அதி வேதனை, கண்களில் புகை கம்மலுடன் சலம் வடிதல், தேகஞ் சில்லீடல், வயிற்றில் பொருமலுடன் நோய், சுட்கித்தல், அடிக்கடி மிக மூத்திரம், உரோமச் சிலிர்ப்பு, அக்கினிமந்தம், சுவாசம், படுக்கை பொருந்தாமை, வாந்தி, வாயும் நாவும் உலர்ந்து சிவத்தல் எனும் குணங்கள் காணும்.

46) தாபச்சுரம் :
அதிக எரிச்சல், மிகு சீதளம், சலம் அருந்தினும் உலரல், மிக தாகம், மார்பெரிச்சல், நித்திரை பங்கம், பிரலாபம், பலவீனம், சுவாசம், அதி வேதனை எனும் குணங்கள் காணும்.

47) விரண சுரம் :
விரணங்களில் பிறந்து அதிசூலையுடன் சர்வாங்க நோயையும், சுர குணங்களை உடையது.

48) ஆதபச்சுரம் :
சித்திரை-வைகாசி-ஆனி-ஆடி இந்த நான்கு மாதங்களில் காலை இரண்டு சாமம் வரைக்கும் நிற்காமல் வழி நடப்பதினால் பிறந்து சாதாரண சுர குணங்களை உடையது.

49) ஈனத்தொனி சுரம் :
இது ஈனத்தொனியுடன் சந்நி பாத சுர குணங்களைப் பெற்றிருக்கும்.

50) அக்கினி மந்த சுரம் :
7-10 நாள் பசிதாகம் இன்மை, துர்ப்பலம், உடலின் நிறம் குறைந்து எரிச்சல், சுட்கல், மலபந்தம், சிலவேளை தாகம், தலைவலி, இருமல், இரைப்பு, அன்னத்தில் வெறுப்பு, அரோசகம், ஏப்பம், வாந்தி, விக்கல், வாய் கசத்தல், இந்திரிய நஷ்டம், முகம் வாடல், கைகால் வலி எனும் குணங்கள் காணும்.

51) ஏப்ப சுரம் :
ஏப்பம், வாந்தி, மார்பெரிச்சல், தலைவலி, நெஞ்சுலர்தல், தேகத்தை திருப்பல் போலுருத்தல், பிரமை, நமச்சலுடன் நடுக்கல், மலபந்தம் எனும் குணங்கள் காணும்.

52) வாந்தி சுரம் :
புளித்த ரத்த வாந்தி, எரிச்சல், மார்பில் தீபட்டது போல் எரிச்சல், கண்டத்திலும், நெற்றியிலும் வியர்வை, பேதியில் சீதளம் விழுதல், மிகுதாகம், துர்ப்பலம், கை கால் குளிர்ச்சி, உடம்பெல்லாம் துவைத்தது போலிருத்தல், நிறக்குறைவு எனும் குணங்கள் காணும்.

53) கொட்டாவி சுரம் :
மிகு கொட்டாவி, கைப்பு, புளிப்பான வாந்தி, தலையிலும், காதிலும் கோயுடன் இரைச்சல், இருந்திருக்க தேகம் நடுக்கல் நெஞ்சிற் கபாதிக்கம் எனும் குணங்கள் காணும்.

54) விக்கல் சுரம் :
அதிக விக்கலுடன் சுரத்தின் குணங்களை உடையது.

55) அநித்திரை சுரம் :
நித்திரையின்மை, மிகு கூச்சல், அடித்தொடை சதையும், முழங்கால் சதையும் வலித்தல், ஈனத்தொளியான வார்த்தை, சதா இருமல், மூர்ச்சை எனும் குணங்கள் காணும்.

56) காச சுரம் :
சதா இருமல்,சிவந்தும், நுரைத்தும், வெளுத்தும் நானா விதமாகிய கோழை விழுதல், வியர்வை, மூர்ச்சை, ஏப்பம், பிரமை, தாகம், வாந்தி, தலையிலும், கண்ணிலும்,எரிச்சல், பேதி,வயிற்று வலி கொட்டாவி, விக்கல் எனும் குணங்கள் காணும்.

57) கட்க சுரம் :
அதிக வெப்பம், தேகம் உலரல், சிரசிலும், கண்ணிலும் நோய், வியர்வை, பல்நோய், சவம் போல், கிடத்தல், உரோக சிலிர்ப்பு, அதிநித்திரை, கோபம் எனும் குணங்கள் காணும்.

56) புராண சுரம் :
இது சுர குணங்களுண்டாகி அதிக நாளாக விடாமல் இருக்கும்.

57) பஷாந்திர சுரம் :
பஷத்துக் கொருதரம் பிறந்து சீதத்துடன் வெப்பம், தாகம், புத்தியில் ஒன்றும் தோன்றாமை, அசீரணம், அரோசகம், துர்ப்பலம், சரீரம் வெளிறல் எனும் குணங்கள் காணும்.

58) மாத சுரம் :
இது மாதத்திற்கொரு முறை, பிறந்து சகல சுரங்களின் குணத்தையும் கொண்டிருக்கும்.

59) வருஷ சுரம் :
இது வருடத்திற்கொரு முறை பிறந்து சகல சுரங்களின் குணத்தையும் கொண்டிருக்கும்.

60) கட்டி சுரம் :
சர்வாங்கத்திலும், கடுகை போல் சிறியதாகவும் பெரியதாகவும், கட்டிகள் எழும்புதல், எரிச்சல், தாகம், உடற்சோர்வு, வியர்வை, நா உலர்ந்து முள்ளைப் போலிருத்தல், நித்திரை பங்கம், வாந்தி எனும் குணங்கள் காணும்.

61) அம்மை சுரம் :
சிறுபயறு பிரமாணம் தேக முழுவதும் அம்மை அல்லது கொப்புளங்கள் எழும்பல், தாகம், அதி வேதனை, தேகம் எரிச்சலுடன் பதறல், சிலவேளை மார்பெரிச்சல், எழுந்திருக்கக் கூடாமை, பலவீனம், படுக்கை பொருத்தாமை, சுவாசம், வயிறு நோய் பேதி, நிறக்குறைவு, நித்திரை பங்கம், கண் சிவத்தல், நாடி சூட்சுமமாக நடத்தல் எனும் குணங்கள் காணும்.

62) நடுக்கல் சுரம் :
நடுக்கல், கூச்சல், வாயிலும் நாவிலும் கொப்புள மெழும்புதல், சுரங்களின் குணங்கள் முதலியன உண்டாயிருக்கும்.

63) வீக்கச் சுரம் :
கீல்களில் வீக்கம், கைகால் கொதிப்பு, மார்படைப்பு, வயிற்றிலுப்புசத்துடன் நோய், மலபநதம் சுரகுணங்கள் எனும் குணங்கள் காணும்.

64) ஆநாக சுரம் :
மலத் துவாரத்தில் சூலை, மலபந்தம், சிரோபாரம், சீதளம், அக்கினி மந்தம், தாகம், நெஞ்சு வரளல், துர்ப்பலம், தேகம் கனத்து வெளிறல், கண் சிவத்தல், உரோமச் சிலிர்ப்பு, அடிக்கடி நீரிறங்கள், நாடியிடத்தை விட்டு அலைந்து மிருதுவாகவும் வேகமாகவும் நடத்தல் எனும் குணங்கள் காணும்.

65) திரிகால சுரம் :
காலை பகல் மாலையென்னும் முக்காலத்திலும் பிறந்து பிதற்றல் பற்கடித்தல், ஆடல்பாடல், விகார குணம், உடம்பு பதறல், அற்ப நித்திரை, நாக்கு முள்ளு போலிருத்தல், முகம் சிவத்தல் காதடைப்பு, அதிசாரம், காசம், ஒக்காளம், பேதி கொட்டாவி எனும் குணங்கள் காணும்.

66) மாறல்சுரம் :
காலநிலை மாற்றத்தாலும், தட்பவெப்ப மாற்றத்தாலும் உண்டாகும் நஞ்சு சுரங்கள் ஐந்து வகைப்படும். இவற்றை விஷசுரம், விடாசுரம், முறைசுரம், குளிர்சுரம், சீதசுரம், விட்டு விட்டு வரும் சுரம் என்றும் கூறுவர்.

67) சுந்தத சுரம் :
இது இரச தாதுவைப் பற்றி உண்டாகும் விடாசுரம்.

68) சுத்த சுரம் :
இது குருதியைப் பற்றி உண்டாகும் புறம்பாகக் காயும் சுரம்.

69) தினமுறை சுரம் :
இது ஊனைப் பற்றி உண்டாகும். இதில் இரண்டாம் முறைச் சுரமும் உள்ளது.

70) மூன்றாம் முறைசுரம் :
இது கொழுப்பைப் பற்றி உண்டாகும் சுரம்.

71) நான்காம் முறைசுரம் :
இது எலும்பு மற்றும் மூளையைப் பற்றி உண்டாகும் சுரம்.