செவ்வாய், 30 ஜூன், 2020

சித்த மருத்துவத்தில் பஞ்சபூத கொள்கை (பஞ்சீகரணம்)

        இந்த உலகில் தோன்றியுள்ள சகல ஜீவராசிகளும் பஞ்சபூத கலப்பால் ஆனது. நம் உடலும் இந்தப் பஞ்சபூத கலப்பின் அடிப்படையிலேயே உண்டானது. இந்தப் பஞ்சபூதங்களும் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் ஸ்தூல, சூட்சும, காரண தேகங்கள் உண்டாகிறது என்றும் கூறுவர். இங்குக் காரணம் என்பது நமது மூச்சினைக் குறிக்கும். இவ்வாறு பஞ்சபூத கலப்பால் மூன்றுவித தேகங்கள் உண்டாவதை பஞ்சீகரணம் என்பர்

1) எலும்பு,  தோல், தசை, மயிர், நாடி நரம்புகள் முதலியவை மண்ணின் தன்மையைகவை.

2) இரத்தம், கொழுப்பு, சீழ், விந்து, சிறுநீர், மூளை போன்றவை நீரின் தன்மையைக் கொண்டவை.

3) சோம்பல், காமம், கோபம், அச்சம், தூக்கம், இறுமாப்பு போன்ற உணர்வுகள் தீயின் தன்மையைக் கொண்டவை.

4) ஓடுதல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் போன்ற உடலின் செயல்கள் காற்றின் தன்மையைக் கொண்டவை.

5) ஆசை, உட்பகை, மோகம், வெறி, வஞ்சனை போன்ற குணங்கள் ஆகாய கூறுகள் என்றும் கூறுவார்.


ஸ்தூல பஞ்சீகரணம் :
  1. மண்ணில் மண் - உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.
  2. மண்ணில் நீர் - உடலில் மாமிசம் உருவாகின்றது,
  3. மண்ணில் தீ - சருமமாகிய தோல் உருவாகின்றது,
  4. மண்ணில் வாயு - நரம்புகளும்,
  5. மண்ணில் ஆகாயம் - ரோமமும்,
  6. நீரில் நீர் - சிறுநீரும்,
  7. நீரில் மண் - உமிழ்நீரும்,
  8. நீரில் வாயு - உதிரமும்,
  9. நீரில் தீ - வியர்வையும்,
  10. நீரில் ஆகாயம் - சுக்கிலமும்,
  11. தீயில் தீ - நேத்திர கண்ணும்,
  12. தீயில் ஆகாயம் - செவியும்,
  13. தீயில் வாயு - சரீரமும்,
  14. தீயில் நீர் - வாயும் நாக்கும்,
  15. தீயில் மண் - நாசியும்,
  16. காற்றில் மண் - இருதயமும் பிராணக் காற்றும்,
  17. காற்றில் நீர் - குதமும் அபான வாயுவும்,
  18. காற்றில் காற்று - சர்வ நாதங்களும் வியானனும்,
  19. காற்றில் தீ - கழுத்தும் உதானனும்,
  20. காற்றில் ஆகாயம் - தொப்புளும், சமானனும்,
  21. ஆகாயத்தில் மண் - இருதயமும்,
  22. ஆகாயத்தில் நீர் - நாசியில் பித்தமும்,
  23. ஆகாயத்தில் தீ - மார்பும்,
  24. ஆகாயத்தில் காற்று - கண்டமும்,
  25. ஆகாயத்தில் ஆகாயம் - சிவமும் உருவாகின்றன. 

சூட்சும பஞ்சீகரணம் :
  1. மண்ணில் மண் - குதமும்,
  2. மண்ணில் நீர் - குய்யமும்,
  3. மண்ணில் தீ - கைகளும்,
  4. மண்ணில் காற்று - பாதங்களும்,
  5. மண்ணில் ஆகாயம் - வாக்கும்,
  6. நீரில் ஆகாயம் - சத்தமும்,
  7. நீரில் காற்று - தொடு உணர்வும்,
  8. நீரில் தீ - பார்வையும்,
  9. நீரில் நீர் - சுவையும்,
  10. நீரில் மண் - வாசனையும்,
  11. தீயில் தீ - பசி தீபாக்கினியும்,
  12. தீயில் மண் - தாகமும்,
  13. தீயில் நீர் - தூக்கமும்,
  14. தீயில் காற்று - கொட்டாவியும்,
  15. தீயில் ஆகாயம் - சங்கமமாகிய கலத்தலும்,
  16. வாயுவில் வாயு - ஓட்டமும்,
  17. வாயுவில் நீர் - இருத்தலும்,
  18. வாயுவில் தீ - தத்தித்தத்தலும்,
  19. வாயுவில் மண் - நடத்தலும்,
  20. வாயுவில் ஆகாயம் - படுத்தலும்,
  21. ஆகாயத்தில் மண் - ஆசையும் அகங்காரமும்,
  22. ஆகாயத்தில் நீர் - துவேசமும்,
  23. ஆகாயத்தில் தீ - பயமும்,
  24. ஆகாயத்தில் காற்று - வெட்கமும்,
  25. ஆகாயத்தில் ஆகாயம் - மேகமும் உருவாகின்றன.
 

வியாழன், 25 ஜூன், 2020

உடற்கூறு தத்துவங்கள் - 96

தத்துவம் என்பது 96 வகைப்படும். இந்தத் தத்துவங்கள் உள்நிலைக் கருவி, புறநிலைக் கருவி என்று இருவகைப்படும். அவற்றில் உள்நிலைக் கருவி சிவ தத்துவம், வித்யா தத்துவம், ஆன்ம தத்துவம் என்று மூன்று பிரிவாக 36 வகைப்படும். புறநிலைக் கருவிகள் 60 வகைப்படும். ஆகத் தத்துவங்கள் 96 வகைப்படும்.
சிவ தத்துவம் என்பது சிவம், சக்தி, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை என்று ஐந்து. அவற்றுள்,

1) எல்லா உயிரினங்களுக்கும் அறிவை எழுப்புவித்து நிற்கும் ஞான வடிவாகிய நாத தத்துவமே சிவம்.

2) எல்லா உயிரினங்களுக்கும் உண்டாகிய தொழிலை எழுப்புவித்து நிற்கும் விந்து தத்துவமே சக்தி.

3) நாத விந்து கூடி அறிவும், தொழிலும் சமமாய் நிற்கும் அவசரமே சதாக்கியம்.

4) கிரியை எனும் தொழில் ஏறி ஞானம் குறைந்து நின்ற அவசரமே ஈஸ்வரம்.

5) ஞானம் ஏறி, கிரியை குறைந்து நின்ற அவசரமே சுத்த வித்தை.

இந்த ஐந்தும் பதியின் சக்தியால் குடிலையாகிய சுத்த மாயையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இந்தத் தத்துவ கர்த்தர்கள் முறையே சிவம், சக்தி, சதாசிவம், மகேஸ்வரன், உருத்திரன்.

இதில் முதலாவதாகிய விந்திலிருந்து நான்கு வாக்குகளும், 51 அட்சரங்களும், 81 பதங்கள், 7 கோடி மந்திரங்கள், ஆகமங்கள், விஞ்ஞானகலர், பிரளயாகலர்களுக்கு தேக-யோகங்களும், பத முக்தியும், பஞ்ச கலைகளும் தோன்றும்.

இனி வித்யா தத்துவம் என்பது காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்று 7 வகைப்படும். அவற்றில்,

6) சென்ற காலத்து எல்லையும், நிகழ் காலத்து பலத்தையும், எதிர்காலத்து புதுமையும் பொருத்துவது காலம்.

7) எக்காலத்தும் கன்மம் இவ்வளவு என்று நிச்சயம் செய்வது நியதி.

8) ஆணவத்தை சிறிது நீக்கி ஆன்மாவுக்குச் செயலை எழுப்புவது கலை.

9) ஆன்மாவுக்கு விரைவில் அறிவை எழுப்புவது வித்தை.

10) பெற்றதை சிறிதாக்கி, பெறாததில் விழைவை உண்டாக்குவது அராகம்.

11) இந்த ஐந்து உடுப்புகளை அணிந்து ஐம்புலனை நுகர்வது புருடன்.

12) ஒன்றையும் நினைக்கச் செய்யாது மயக்கத்தில் தருவது மாயை.

இவற்றில் கலையும், நியதியும் அசுத்த மாயையில் தோன்றும். கலையில், வித்தை தோன்றும். வித்தையில் அராகம் தோன்றும். இந்த ஐந்து உடுப்புகளும் சேர்ந்த ஆன்மாவே புருடன். இந்த ஆறுக்கும் மூலமாய் இருந்த அசுத்த மாயையே மாயையாம். இந்த அசுத்த மாயையே ஆன்மாவுக்குத் தனுகரணம் உண்டாக்குவதாய், மலங்களில் விபரீத உணர்வைச் செய்ய வல்லது. இதனைப் பதிக்கு பரிக்கிரக சக்தி என்பர்.

இனி ஆன்ம தத்துவமாவது வித்யா தத்துவம் ஏழில் ஒன்றாகிய கலையிலே அவ்வியத்த குணவடிவாய் தோன்றிய மூலப்பகுதி எனும் பிரபஞ்ச காரணமான பிரகிருதி மாயையில் நின்று உண்டாகிய 24 கருவிகளும் ஆகும்.

அவை பூதம்-5, அறிவுப் பொறி-5, புலன்-5, தொழிற் பொறி-5, உட்கருவி-4 ஆகும். இதில்,

பூதம் ஐந்தாவது,

    13) நிலம்
    14) நீர்
    15) நெருப்பு
    16) காற்று
    17) வெளி

அறிவுப் பொறி ஐந்தாவது,

    18) மூக்கு
    19) நாக்கு
    20) கண்
    21) காது
    22) மெய்

புலன்கள் ஐந்தாவது,
    23) நாற்றம்
    24) சுவை
    25) ஒளி
    26) ஓசை
    27) ஊறு

தொழிற் பொறி ஐந்தாவது,

    28) வாய்
    29) கை
    30) கால்
    31) குறி
    32) மலவாயில்

உட்கருவி நான்காவது,

    33) மனம்
    34) புத்தி
    35) சித்தம்
    36) அகங்காரம்

இனி புறநிலைக் கருவிகள் என்பவை., மண்ணின் கூறு-5, நீரின் கூறு-5, தீயின் கூறு-5, காற்றின் கூறு-5,  வெளியின் கூறு-5. ஆக ஐம்பூத கூறுகள் இருபத்தி ஐந்து.

மேலும் மண்ணின் வழிப்பட்ட நரம்பு-10, காற்றின் வழிப்பட்ட வாயு-10, வெளியின் வழிப்பட்ட அவா-3, தொழிற் பொறி வழிப்பட்ட செயல்-5, பிரகிருதி வழிப்பட்ட குணம்-3, விந்து வழிப்பட்ட வாக்கு-4 ஆகப் புறநிலைக் கருவிகள் அறுபதாகும்.

மண்ணின் கூறு ஐந்தாவது,

    37) மயிர்
    38) எலும்பு
    39) தோல்
    40) நரம்பு
    41) ஊண்

நீரின் கூறு ஐந்தாவது,

    42) சிறுநீர்
    43) செந்நீர் (உதிரம்)
    44) வெண்ணீர் (விந்து)
    45) மூளை
    46) மஜ்ஜை

தீயின் கூறு ஐந்தாவது,

    47) உணவு
    48) உறக்கம்
    49) அச்சம்
    50) புணர்ச்சி
    51) சோம்பல்

காற்றின் கூறு ஐந்தாவது,
    52) ஓடல்
    53) நடத்தல்
    54) இருத்தல்
    55) கிடத்தல்
    56) நிற்றல்

வெளியின் கூறு ஐந்தாவது,

    57) சினம்
    58) ஈயாமை
    59) மயக்கம்
    60) செருக்கு
    61) பொறாமை

மண்ணின் வழிப்பட்ட நரம்பு பத்தாவது,

    62) வலது கால் பெருவிரல் இருந்து கத்திரிக்கோல் மாறலாக இடது மூக்கைப் பற்றி நிற்பதான இடகலை
    63) இடது கால் பெருவிரலிலிருந்து கத்திரிக்கோல் மாறலாக வலது மூக்கைப் பற்றி நிற்பதான பிங்கலை
    64) மூலாதாரம் தொடங்கி எல்லா நரம்புகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாய் உச்சி துவாரம் வரைக்கும் இருக்கும் சுழுமுனை
    65) கண்ணளவாய் நிற்பதாகிய காந்தாரியும்
    66) உடலெங்கும் நிற்பதாகிய அத்தியும்
    67) உண்ணாக்கில் நின்று சோறு, தண்ணீர் இவைகளை விழுங்கச் செய்யும் சிங்குவை
    68) செவியளவாய் நிற்பதாகிய அலம்புடை
    69) பாதத்தில் நிற்பதாகிய புருடன்
    70) மார்பில் நிற்பதாகிய சங்கினி
    71) குறி குதத்தில் நிற்பதாகிய குரு

காற்றின் வழிப்பட்ட வாயு பத்தாவது,

    72) மூலாதாரந் தோன்றி, இடை-பிங்கலை வழி ஏறி, கபாலத்தை சுற்றி, நாசி வழி பன்னிரண்டு அங்குலம் புறப்பட்டு நாலங்குலம் வெளியில் சென்று, எட்டங்குலம் உள்ளடங்கி.. தான் நிற்கும் இடத்தில் தாக்குறுவதாகிய பிராணன்
    73) குறியையும், மலவாயையும் பற்றி நின்று நீர், மலங்களை கழிப்பிக்கும் அபானன்
    74) விக்கல், கக்கல் இவற்றை உண்டு பண்ணும் உதானன்
    75) உண்ட அன்னசாரத்தை 72000 நாடிகளில் சேர்த்து உடலை வளர்க்கும் வியானன்
    76) யாவையும் ஏறுதல், குறைதலின்றி சமமாக இருக்கச் செய்யும் சமானன்
    77) இருமல், தும்மலை உண்டாக்கும் நாகன்
    78) கண்ணேற்லை செய்யும் கூர்மன்
    79) சோம்பல், கொட்டாவிகளை உண்டு பண்ணும் கிரிகரன்
    80) இமைத்தல், நகைத்தலை செய்யும் தேவதத்தன்
    81) பிராணன் உடலை விட்டுப் பிரியினும், தான் பிரியாமல் நின்று உடம்பை வீங்கவும், விரியவும் செய்து, கபாலத்தை பிளந்து செல்லும் தனஞ்செயன்

வெளியின் வழிப்பட்ட அவா மூன்றாவது,

    82) ஊருங் காணியும தேடி, அவற்றைப் பற்றிக் கிடத்தலால் வரும் பிணக்காகிய மண்ணவா
    83) பெண்டு பிள்ளைகளைப் பற்றி நிற்றலால் வரும் பிணக்காகிய பெண்ணவா
    84) பொன், மணி முதலிய பொருள்களைத் தேடி, அவற்றைப் பற்றி நிற்றலால் வரும் பிணக்காகிய பொருளவா

தொழிற் பொறி வழிப்பட்ட செயல் ஐந்தாவது,

    85) வெளியின் இடமாகிய வாய்க்கு உயிர்க் கூறாகிய வார்த்தை
    86) வாயுவுக்கு இடமாகிய காலுக்கு உயிர்க் கூறாகிய நடை
    87) தீயின் இடமாகிய கைக்கு உயிர்க் கூறாகிய கொடுக்கல் வாங்கல்
    88) நீரின் இடமாகிய கீழ்வாய்க்கு உயிர்க் கூறாகிய விடுதல்
    89) மண்ணின் இடமாகிய குறிக்கு உயிர்க் கூறாகிய மகிழ்ச்சி

பிரகிருதி வழிப்பட்ட குணம் மூன்றாவது,

    90) அருள், ஐம்பொறியடக்கல், அறிவு, தவம், பொறை, மேன்மை, மோனம், வாய்மை ஆகிய குணங்களை உடைய சாத்வீகமும்
    91) ஊக்கம், வீரம், அறம், தவம், கொடை, கல்வி, கேள்வி ஆகிய குணங்களை உடைய இராசதம்
    92) ஒழுக்கமின்மை, காமம், சினம், கொலை, சோம்பல், நெறிவழு, நெடுந்துயில், பேருண்டி, பொய், மறதி, வஞ்சகம் ஆகிய குணங்களை உடைய தாமதம்

விந்து வழிப்பட்ட வாக்கு நான்காவது,

    93) செவிக்குக் கேட்கப்படுவதாய், பொருளோடு கூடியதாய், பிராணவாயுவை பொருந்தி. வெளிப்பட்டுத் தொழிற்படுவதாகிய வைகைரி
    94) செவிக்குப் புலப்படாமல், பிரணவாயுவின் செயலைப் பொருந்தாமல் கண்டத்தில் அடங்கி எழுவதாகிய மத்திமை
    95) நினைவு மாத்திரையில் நிற்பதாகிய பைசாந்தி
    96) பர சரீரத்தின் உள்ளாக நாத மாத்திரையில் விளங்கி ஞானமாத்திரைக்கு ஏதுவாகிய இலக்கணத்தை உடைய சூக்குமை.

இதுவரை இங்குக் கூறப்பட்ட தத்துவங்கள் சதுரகிரி தலபுராணம் என்ற நூலில் கூறப்பட்டதாகும். இது தவிர மேலும் பல்வேறு நூல்கள் பல்வேறு விதமாகக் கூறுகிறது. அவற்றில் முக்கியமான ஆறு நூல்கள்பற்றி மட்டும் பார்ப்போம். அந்த நூல்கள் என்னென்ன என்றால்…

        1) சிவப்பிரகாச  தத்துவக் கட்டளை    (சிவ.த.க)
        2) திருஆலவாய் தத்துவக் கட்டளை    (ஆ.த.க)
        3) வேதாந்த தத்துவக் கட்டளை    (வே.த.க)
        4) தத்துவ தீபிகை    (த.தீபி)
        5) சித்தாந்த தத்துவக் கட்டளை    (சி.த.க)
        6) யூகிமுனிவர் சிந்தாமணி    (யூகி.சி)

உடற்கூறு தத்துவங்கள் பாடபேதம்:

தத்துவங்கள்

சி.த.க

ஆ. த.க

வே.த.க

த.தீபி

சி.த.க

யூகி.சி

பஞ்சபூதம் (5)

5

5

5

NIL

5

5

பொறிகள் (5)

5

5

5

5

5

5

தன்மாத்திரைகள் (5)

5

5

5

5

5

5

கன்ம இந்திரியங்கள் (5)

5

5

5

5

5

5

கன்ம இந்திரிய செயல்கள் (5)

5

5

5

5

5

5

வித்யா தத்துவங்கள் (7)

7

7

NIL

NIL

7

NIL

சிவ தத்துவங்கள் (5)

5

5

NIL

NIL

5

NIL

கரணம் (4)

4

4

4

4

4

4

மண்ணின் கூறு (5)

5

5

NIL

NIL

5

NIL

நீரின் கூறு (5)

5

5

NIL

NIL

5

NIL

தீயின் கூறு (5)

5

5

NIL

NIL

5

NIL

காற்றின் கூறு (5)

5

5

NIL

NIL

5

NIL

ஆகாய கூறு (5)

5

5

NIL

NIL

5

NIL

தசவாயுக்கள் (10)

10

10

10

10

10

10

தசநாடிகள் (10)

10

10

10

10

10

10

வாக்குகள் (4)

4

4

NIL

NIL

4

NIL

முக்குணங்கள் (3)

3

3

3

3

3

3

அகங்காரங்கள் (3)

3

3

NIL

NIL

NIL

NIL

பற்றுகள் (3)

NIL

NIL

3

NIL

3

3

அறிவு (1)

NIL

NIL

1

NIL

NIL

1

ஆசாயம் (5)

NIL

NIL

5

NIL

NIL

5

கோசம் (5)

NIL

NIL

5

5

NIL

5

ஆதாரங்கள் (6)

NIL

NIL

6

6

NIL

6

மண்டலம் (3)

NIL

NIL

3

3

NIL

3

மலம் (3)

NIL

NIL

3

3

NIL

3

முக்குற்றம் (3)

NIL

NIL

3

3

NIL

3

இருவினை (2)

NIL

NIL

2

NIL

NIL

2

அவத்தை (5)

NIL

NIL

5

5

NIL

5

அராகம் (8)

NIL

NIL

8

8

NIL

8

வாசல்கள் (9)

NIL

NIL

NIL

9

NIL

NIL

தாதுக்கள் (7)

NIL

NIL

NIL

7

NIL

NIL

மொத்தம்

96

96

96

96

96

96